மின்சாரம் இல்லை; எரிவாயு இல்லை; எரிபொருள் இல்லை; அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு; பொது மக்களின் அன்றாட வாழ்வு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கோட்டாவுக்கு வாக்களித்தோர் பலவிதம். அப்பட்டமான இனத்துவேசத்தின் காரணமாக வாக்களித்தோர் ஒரு வகையென்றால், கோட்டா, பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, கொழும்பை சுத்தம் செய்து அழகுபடுத்தியதைப் போல, நாட்டையும் ஆட்சியையும் சுத்தம் செய்து அழகுபடுத்திவிடுவார் என்று நம்பி வாக்களித்தோர் இன்னொரு வகை.
இன்று, இந்த எல்லா வகையினரும் மின்சாரமின்றித் தத்தளிக்கிறார்கள். எரிவாயு, எரிபொருளுக்காக வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். ஏறியிருக்கும் விலைவாசியைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.
வெற்றி வீரனாகப் பார்க்கப்பட்ட கோட்டா, இன்று அரசியல் கோமாளியாக, அவருடைய ஆதரவாளர்களாலேயே பார்க்கப்படுகிறார். அவருடைய தேர்தல் பிரசார கீதம், இன்று நக்கலுக்கும் நையாண்டிக்குமானதொரு பாடலாக மாறியிருக்கிறது. இன்றைய நிலையில், ‘மொட்டு’ ஆட்சியில், ‘கோட்டாவும் தோல்வி; ராஜபக்ஷர்களும் தோல்வி’. இதுதான் நிதர்சனம்!
ஆனால், இலங்கை மக்கள் மீது, ராஜபக்ஷர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக, இலங்கை மக்களின் ஞாபகத்திறன் குறைவின் மீது, அதீத நம்பிக்கை இருக்கிறது. இரு துருவங்களுக்கு இடையே மாறி மாறி அசையும் ‘பென்டூலம்’ போல, இலங்கை வாக்காளர்கள் இரண்டு தெரிவுகளையே மாறி மாறித் தெரிவுசெய்து கொண்டிருப்பார்கள் என்பது, ராஜபக்ஷர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆகவே, அந்த இரண்டு தெரிவுகளில் ஒன்றாகத் தாம் இருக்கும் வரை, ராஜபக்ஷர்கள் கவலைகொள்ளப் போவதில்லை. இந்தமுறை ஆட்சியை இழந்தாலும், அடுத்த முறை ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.
ஏனென்றால், இலங்கை வாக்காளர்கள், அவ்வளவு தூரம் பலவீனமான நினைவுத்திறனும் பலமான உணர்ச்சிவசப்படும் தன்மையையும் கொண்டவர்கள். ஆகவே, வரப்போகும் தேர்தலில், தமது தோல்வி நிச்சயம் என்பதை ராஜபக்ஷர்கள் உணர்ந்துவிட்டால், அடுத்து ஆட்சிக்கு வரப்போகிறவர்கள், இலகுவில் நாட்டை மீட்டுவிட முடியாத ஆழத்தில்தான், நாட்டைப் புதைத்துவிட்டுப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ராஜபக்ஷர்கள் பரம்பரை அரசியல்வாதிகள். அதிகாரம்தான் அவர்களின் இலக்கு. அதைக் கைப்பற்ற, அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு, வரலாறு சாட்சி.
ராஜபக்ஷர்களின் நிலை இவ்வாறு இருக்கையில், ராஜபக்ஷர்களின் ஆட்சியின் பெருந்தோல்வியின் காரணத்தல், ராஜபக்ஷர்களுக்கு எதிராக இன்று பொதுமக்களிடையே எழுந்திருக்கும் மனநிலையைக் கணித்துக்கொண்டு, அடுத்த தேர்தலில் ராஜபக்ஷர்கள் தோற்றுவிடுவார்கள்; ஆகவே, அடுத்தது நான் தான் ஜனாதிபதி; என்னுடைய கட்சிதான் ஆளுங்கட்சி என்ற கனவில் பலரும் இயங்கத் தொடங்கி உள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஒரு புறம்; ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தாலும், ‘43 படையணி’ என்று ஜனாதிபதி கனவுடன் தனித்து இயங்கத் தொடங்கியுள்ள பாட்டலி சம்பிக்க; பிரதான கட்சிகளின் மீதும் அதன் வேட்பாளர்கள் மீதும் மக்கள் கொண்டுள்ள வெறுப்பை, தனக்கு மூலதனமாக்கத் துடிக்கும் அநுர குமார; ‘என் கதை இன்னும் முடியவில்லை’ என, மீண்டும் தலைதூக்க எத்தனிக்கும் மைத்திரிபால சிறிசேன; கோட்டாவால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள உதய கம்மன்பில, விமல் வீரவன்ச என, ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்ற நிலையில், இப்போது பலரும் ஜனாதிபதி கனவில் இயங்கத் தொடங்கிவிட்டார்கள்.
தமது ஆட்சியின் தோல்வி ராஜபக்ஷர்களுக்கு கடும் அதிருப்தியைத் தந்தாலும், தமது எதிர்க்கட்சிகள் பிரிந்திருப்பதைக் கண்டு ராஜபக்ஷர்களுக்கு மகிழ்ச்சியே! அதிலும் குறிப்பாக, ராஜபக்ஷர்களின் பெரும் வாக்குவங்கியான ‘சிங்கள-பௌத்த’ பெருந்தேசியவாத வாக்குவங்கியைக் குறிவைத்து பாட்டலி சம்பிக்க, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் களமிறங்கியிருப்பது, ராஜபக்ஷர்களிடமிருந்து வௌியேறும் அந்த வாக்குவங்கியின் வாக்குகள், மற்றோர் இடத்தில் சென்று குவிவதற்குப் பதிலாக மூன்று, நான்கு என உடையப்போகின்றது.
மேலும், மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாஸ, அநுர குமார என பிரதேச ரீதியிலும் கட்சி ரீதியிலும் வாக்குகள் சிதைவடையும். இதுவும் ராஜபக்ஷர்களுக்கு சாதகமானதே.
இதனால்தான், இன்றைய ஆட்சி எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், அதற்கான எதிர்ப்பு என்ற ஒன்றே இல்லாதது போன்ற நிலைதான் இருக்கிறது.
யுத்தமொன்றில் எதிர்க்கும் படைகளின் அளவு, எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அந்தப் படைகளிடையே ஒருங்கிணைவு இல்லாவிட்டால், அவற்றால் வினைத்திறனாக எதையும் செய்ய முடியாது. இதுதான் இன்றைய எதிர்க்கட்சிகளின் நிலை.
2015 – 2019 வரை ராஜபக்ஷர்கள் எப்படி சிம்மசொப்பனமானதோர் எதிர்க்கட்சியாக இருந்தார்களோ, அதைப்போன்றதோர் எதிர்க்கட்சி இப்போது இல்லை. அரசியல் அனுபவம் குறைவானவர்களினதும் சோம்பேறிகளினதும் கூடாரமாகத்தான் இன்றைய எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. இதற்கான ஒரே நிரூபணம், இன்றைய நிலையில் ராஜபக்ஷர்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், எப்படி இருந்திருப்பார்கள் என்ற சிந்தனைதான்.
ராஜபக்ஷர்கள் மோசமான ஆட்சியாளர்கள்; ஆனால், திறமையான அரசியல்வாதிகள். இன்றைய எதிர்க்கட்சிகள் ஆட்சியிலும் மோசம்; அரசியலிலும் மோசம்.
இது இன்றைய நிலைதான்; ஜனாதிபதி தேர்தல் நெருங்கும்போது, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, ஒரு பொதுவேட்பாளரை ஆதரிக்கும் என்று நம்புவோர் பலர் உளர். அவர்களது நம்பிக்கை யதார்த்தமாவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.
ஆனால், அது ராஜபக்ஷர்களை அடுத்த தேர்தலில் தோற்கடித்தாலும், அதற்கடுத்த தேர்தலில் இன்னும் பலத்துடன் ஆட்சிக்குக் கொண்டுவந்துவிடும். இதுதான் 2015 – 2019இல் நடந்தது.
ஏன், அப்படி என்று பலரும் வினவலாம்? அது நல்ல கேள்வி. ‘பொது வேட்பாளர்’ என்பது, ஓர் அரசியல் கட்சி அல்ல; அது ஓர் அரசியல் கூட்டும் அல்ல; அது ஓர் அரசியல் சக்தியும் அல்ல. ‘பொது வேட்பாளர்’ என்பது, ஒரு சந்தர்ப்பவாத நகர்வு. அதன் நோக்கம், ராஜபக்ஷர்களை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிப்பது மட்டுமே!
அதற்கு மேல், அந்தச் சந்தர்ப்பவாதக் கூட்டுக்கு நோக்கமும் கிடையாது; நோக்கமாக எதை முன்வைத்தாலும், அதனை நிறைவேற்றுவதற்கான இயலுமையும் கிடையாது.
வெவ்வேறு அரசியல் சிந்தனைகள், சித்தாந்தங்கள், நம்பிக்கைகள், அணுகுமுறைகள் கொண்டவர்கள், ஒரே கட்சியாக இயங்க முடியாது. மைத்திரிபாலவும் ரணில் விக்கிரமசிங்கவும் ராஜபக்ஷர்களைத் தோற்கடிக்க ஒன்றிணையலாம். அதைத் தாண்டி, அவர்களின் அரசியலில் வேறென்ன ஒற்றுமை இருக்கிறது?
அநுர குமாரவும், சஜித் பிரேமதாஸவும் ராஜபக்ஷர்களை தோற்கடிக்க ஒன்றிணையலாம். அதைத் தாண்டி ஒன்றிணைந்து இயங்க, அவர்களால் முடியுமா? தமிழ்க் கட்சிகளும் அல்லது முஸ்லிம் கட்சிகளும் அல்லது வீரவன்சவும் கம்மன்பிலவும் ராஜபக்ஷர்களை தோற்கடிக்க ஒன்றிணையலாம்; அதற்கு மேல் அவர்களின் அரசியல், ஒன்றோடொன்று இயைபுடையதா? இதுதான் ‘பொது வேட்பாளர்’ என்ற முயற்சி தோல்வியடைவதற்கான மூலகாரணம்.
ராஜபக்ஷர்களைத் தோற்கடிக்க அது பயன்படும். அதற்குப் பின்னர் அது படுதோல்வியடையும். அந்தத் தோல்வியால் கசப்புறும் மக்கள், மீண்டும் ராஜபக்ஷர்களைப் பலத்துடன் ஆட்சிக்குக் கொண்டு வருவார்கள்.
அப்படியானால், இதற்கான தீர்வு என்ன? இது நல்ல கேள்வி. மிகக் கடினமான கேள்வியும் கூட! தீர்வுக்கு முதற்படி, இலங்கையில் பலமானதோர் எதிர்க்கட்சி கட்டியெழுப்பப்பட வேண்டும். 2019, 2020 தேர்தல்களில், ராஜபக்ஷர்கள் பெற்ற பெருவெற்றியின் மூலதனம், ராஜபக்ஷர்கள் கட்டியெழுப்பிய ‘ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன’ என்ற கட்சி.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற பெருவிருட்சத்திலிருந்து, ராஜபக்ஷ ஆதரவாளர்களைப் பிரித்தெடுத்து, தமக்கான தனிக்கட்சியை ஸ்தாபித்தமைதான் அவர்களது பெருவெற்றியின் அடிப்படை. ஆனால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மாற்றானதொரு பலமான எதிர்க்கட்சி இலங்கையில் இல்லை.
ஐக்கிய மக்கள் சக்தி, தன்னைப் பிரதான எதிர்க்கட்சியாக முன்னிறுத்தினாலும், அது ஒரு கட்சியே அல்ல; பல கட்சிகளினதும் கூட்டு. அவ்வளவுதான்! ராஜபக்ஷர்களின் வெற்றி என்பது, வெறுமனே தமக்கான கட்சியை உருவாக்கியது மட்டுமல்ல, இலங்கையின் பழம்பெருங்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை செல்லாக்காசாக்கியதும் தமது வெற்றியைப் பெருவெற்றியாக்கியதுமாகும்.
ஆகவே, ஜனாதிபதி கனவில் காலம் கழிக்காமல், பலமானதோர் எதிர்க்கட்சியை (கூட்டணியை அல்ல) கட்டியெழுப்பும் கைங்கரியத்தை, அரசியல் அறிவுள்ளவர்கள் முன்னெடுக்காதவரை, ராஜபக்ஷர்களின் அரசியல் தொடரும்.
அடுத்த தேர்தலில், அவர்கள் தோற்கலாம்; ஆனால், தோற்றதற்கும் சேர்த்து, அதற்கடுத்த தேர்தலில் அவர்கள் எழுவார்கள். 1970இல் தோல்வியடைந்த ஐக்கிய தேசிய கட்சி, 1977இல் பெருவெற்றி காண, சிறிமாவின் மோசமான ஆட்சி மட்டும் காரணமல்ல; ஜே.ஆர் என்ற பலமான தலைமையின் கீழ், பலமானதொரு கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி உருவாகி நின்றதும் முக்கிய காரணம் ஆகும். இது ஜனாதிபதி கனவில் உள்ளோரின் கவனத்துக்கு!
இணைந்திருங்கள்