நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பை எதிர்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அப்பதவியில் இருந்து நீக்குமாறு பல தரப்பினரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு அரச சார்பு பிக்குகள் குழுவொன்றும் நேற்று (31) ஜனாதிபதியிடம் பலமான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அரசாங்க உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக கவனம் செலுத்தியுள்ள அரசாங்கப் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவொன்று, நிதியமைச்சரை நீக்குமாறு ஜனாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, அரசுக்கெதிராக பல்வேறு போராட்டங்கள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், நேற்று இரவு மின்துண்டிப்பு, எரிபொருள் பற்றாக்குறை, விலையேற்றம் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டதுடன் சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், நிலைமை கைமீறி செல்லவே கொழும்பு பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று காலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்டது.

அத்துடன், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இதுவரை நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.