பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள். எங்களுடைய இன்றைய தொடர் போராட்டம் என்பதும் பசியை போக்க வேண்டியதன் பொருட்டானதாகவும் அமைந்திருக்கிறது. வரலாற்று நெடுகிலும் எண்ணற்ற போராட்டங்கள் இத்தகைய பட்டினியை போக்க வேண்டியதன் பொருட்டானதாகவே அமைந்திருக்கின்றன என்பதும் மனங்கொள்ளதக்கது.

தெற்காசியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட நாடு இன்று பட்டினியின் இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது; போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்ளும் இலங்கையர்கள் என்ற செய்தி பேரிடியாக இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் எங்களுடைய அரசியல் தலைமைகள் தான் என்று முடிந்த முடிவாய் எல்லோரும் போல ஒப்புக்கு பேசிவிட்டு, வெறுங்கதை பேசி கொண்டுதான் இனியும் இருக்க போகிறோமா?

யார் மாறினாலும் எந்த அரசு வந்தாலும் எங்களுடைய நாட்டின் பொருளாதார நிலைமையை சீர்ப்படுத்தி வழமையான நிலைமைக்கு நாடு திரும்புதல் எத்தனை வருடகாலங்களின் பின் சாத்தியமாகும் என்பது திட்டவட்டமாக சொல்ல முடியாத நிலையில் தான் உள்ளது என்பது கசப்பான உண்மை.

இந்த நெருக்கடிகளின் தோற்ற பின்னணியில் எங்களுடைய கல்வி முறையின் இருப்பும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

குறிப்பாக கன்னங்கராவின் இலவச கல்வி குறித்த பரிந்துரைகளில் முக்கியமானது, விவசாயக் கல்லூரிகளுக்கு இட்டுச் செல்லும் செயல்முறை பாடசாலைகள். ஆனால் ஹந்தஸ்ஸ பாடசாலை முறைமையின் கீழ் 243 பாடசாலைகளில் செயல்முறை பாடசாலைகளுக்கு பரிசோதனை ரீதியான மதிப்பீட்டினால் ஆதரவளிக்கப்பட்ட போதிலும், அது திடீரென நிறுத்தப்பட்டது. இந்த பாடசாலை முறைமை தொடரப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தால், இலங்கையில் நிலவும் தொழிலின்மை பிரச்சினை, பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகள் கிடைத்திருக்க கூடும்.

இன்றளவிலும் எங்களுடைய கல்விமுறையில் இருக்கின்ற பாரிய பிரச்சினை எழுத்தை மையப்படுத்திய அந்நிய நாட்டிற்குரிய பரீட்சை முறைமை. இந்தமுறைமையில் உருவாகும் கல்விச்சமூகம் என்பது மாறுதல்லற்ற ஒன்றாகவே இருக்கிறது. மறுபுறம் அறிவு பொருளாதாரத்திற்கான சாத்தியப்பாடுகள் என்பதும் இல்லாதிருக்கின்றது. மிகச் சுருக்கமாக சொன்னால் விளைத்திறனோடு கூடிய ஆளுமை உருவாக்கம் என்பது, சான்றிதழை மையப்படுத்திய கல்விமுறையில் பாழ்பட்டு போயுள்ளது. இந்த நிலைமைகள் ஒவ்வொரு துறை சார்ந்தும் புத்தாக்கம், விளைத்திறனுடன் கூடிய ஆளுமைகளின் உருவாக்கம் என்பதை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு துறைசார்ந்தும் கட்டுடைத்து கட்ட வேண்டிய எண்ணற்ற முடிச்சுகளும் கட்டுகளும் இருந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தொடருகின்ற போராட்டம் ஏதோவொருவகையில் இவை அனைத்திற்குமான தீர்வாகவும் மறுசீரமைப்புக்கான வாய்ப்பாகவும் இருக்ககூடும் என நம்புவோம். போராடுவோம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பசிபிணியை போக்க வேண்டி சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். எந்த கேள்விகளும் இல்லாமல் வாங்கிக் கொண்ட நன்கொடைகள், கடன்தொகைகள், நிவாரணங்கள் இவை இனி எப்போதும் கிடைக்கும் என யோசித்து பார்க்கவும் தேவையில்லை. உழைக்கும் வர்க்கம் நாங்கள். எங்களுடைய உழைப்பு சுரண்டப்படாமல் இருக்கவும் பொறுப்புடையவர்கள். இந்தவகையில் எங்களுடைய சூழலில் கிடைக்க கூடிய நஞ்சற்ற உணவு வகைகளை விட்டுவிட்டு விரையுணவு கலாசாரத்திற்கு பழக்கப்பட்டு வெளிநாடுகளின் இறக்குமதிகளில் தங்கி நின்ற நாம், இனியேனும் எங்கள் நிலங்களில் எங்கள் உழைப்பில் விளைவித்து வாழ்வோம். சிறிய சிறிய அளவில் எங்களது வீட்டுச்சூழலில் பயிரிடுவோம்; இயற்கை முறையில் விளைவிக்கும் பயிர்களை பகிர்ந்து கொள்வோம்; எவ்வளவு விலையேற்றம் என்றாலும் பால்மா தான் வேண்டும் என்ற சலவை செய்யப்பட்ட மனநிலையிலிருந்து மீளுவோம்.

எங்கள் நிலங்களில் நாங்கள் விளைவிப்போம்; பசி தீர்ப்போம்.

இரா.சுலக்ஷனா