” மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ராஜபக்சக்கள் ஆட்சி அமைக்க முற்பட்டால் – அந்த ஆட்சிக்கு எதிராக வீதியில் இறங்குவோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, அரசியல் கட்சிகளை கூறுபோடுவது ராஜபக்சக்களுக்கு கைவந்த கலை. அந்த செயலை தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் செய்துள்ளார். இந்த செயலை அனுமதிக்க முடியாது.
பிரதமராக மஹிந்த வேண்டாம். அமைச்சரவைக்கு ராஜபக்சக்களும் வேண்டாம். உறுப்பினர்களை விலைக்கு வாங்கி புதிய ஆட்சி அமைந்தால் அந்த அரசுக்கு எதிராக போராடுவோம். அரசை முன்னெடுக்க இடமளிக்கமாட்டோம். சாந்த பண்டாரவையும் விலைக்கே வாங்கியுள்ளனர். ” – என்றார்.
இணைந்திருங்கள்