அத்தியாவசிய சேவைகளுக்கான வரிசைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.- பொருளாதாரத்தையும் தேசிய பாதுகாப்பையும் இல்லாதொழித்த நாட்டையே கடந்த அரசாங்கம் எமக்கு கையளித்தது.- தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம்.-

சர்வதேச நாணய நிதியம் போன்றே நட்பு நாடுகளும் எங்களுக்கு உதவ தயாராக உள்ளனபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதற்குப் பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ‘இல்லை, நான் பதவி விலக மாட்டேன்… பயப்படாதீர்கள்…’ என கூறினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் இன்று (26) முற்பகல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்ததாக, பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,பிரதமர், அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சங்கத்தினருக்கு இடையில் அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய இந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவிப்பதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமராக கடமையாற்றுவது அத்தியாவசியமானது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தி மக்கள் மத்திக்கு சென்று பாராளுமன்றம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக சுயாதீனமாக செயற்படுவது நெறிமுறைக்கு புறம்பானது எனவும் மாகாண சபை உறுப்பினர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

69 இலட்சம் பெரும்பான்மை மக்கள் இன்னமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாகவும், அவர்களது மௌனம் காரணமாக சிறு குழுவின் போராட்டத்திற்கு சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களினாலும் விளம்பரம் கிடைத்தமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான பல அரசியல் அமைப்புகளினால் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களை தூண்டிவிட்டு செயற்படுத்தும் ஒன்று என சுட்டிக்காட்டிய குறித்த பிரதிநிதிகள், இந்த போராட்டத்தில் தீவிரவாத சக்திகள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாட்டை சீர்குலைக்க எதிர்பார்க்கும் வெளிநாட்டு சக்திகள் செயற்படுவதாக கூறப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நாட்டை வழிநடத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இல்லாவிட்டால் இன்று இவ்வாறான போராட்டங்களை நடத்துவதற்கான சூழல் உருவாகியிருக்காது என்றும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அங்கு பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,நாட்டின் தீர்மானமிக்க ஒரு தருணத்திலேயே உங்களை இன்று சந்திக்கின்றேன்.

நாடும், நாட்டு மக்களும் எவ்வளவு இக்கட்டானதொரு சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறித்து நீங்கள் அறிவீர்கள். அது குறித்து நான் புதிதாக கூறவேண்டியதில்லை. அரசாங்கம் என்ற வகையில் இந்த நாட்டின் இந்த சவாலை முறியடிக்க இரவு பகலாக உழைத்து வருகிறோம். நான் கூற வேண்டியது அவ்வளவுதான்.பொருளாதாரம் போன்றே தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டையே கடந்த அரசாங்கம் எங்களிடம் ஒப்படைத்தது என்பதை சொல்லத் தேவையில்லை.

அப்போது மக்களிடம் சென்று ஆட்சி அதிகாரத்தை எமக்கு கையளியுங்கள் இந்த நிலையை சரி செய்வோம் என்று கூறினீர்கள்.ஆனால், கொவிட் தொற்றுநோயுடனேயே அரசாங்கம் முன்னோக்கி அடியெடுத்து வைக்க வேண்டியிருந்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. இது முழு உலகமும் எதிர்பார்க்காத ஒன்று.அது போன்ற சூழ்நிலைகளில் மக்களின் உயிரை விட, தமது அதிகாரத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்றே சிலர் சிந்திப்பர்.

ஆனால் நாம் மக்களின் உயிரை எப்படி காப்பாற்றுவது என்றே சிந்தித்தோம். அதுதான் எமது வித்தியாசம். அரசாங்கம் என்ற ரீதியில் அந்தப் பணியை முன்னெடுப்பதற்கு முன்னுரிமை அளித்தோம். அதனை நீங்கள் அறிவீர்கள். அதற்கு மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் தலைமை தாங்கினர்.அப்போது கொவிட் இறப்புகளை எண்ணிக்கொண்டிருந்த சமூகத்தை விரைவாக மாற்ற முடிந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உலகத்தில் இருந்து இன்னும் தொற்று ஒழிக்கப்படவில்லை என்றாலும், கொவிட் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை எம்மால் தற்போது நிறுத்த முடிந்துள்ளது. அவர்கள் இன்று எமக்கு எதிராக போராட்டம் நடத்தலாம். அது உண்மை. அது அவர்களின் விருப்பம் மற்றும் உரிமை என்றே நான் நம்புகிறேன்.கொவிட் பிரச்சனையாலேயே எமக்கு அடிக்கடி சந்திக்க கூட முடியாதிருந்தது. நாங்கள் ஒன்றிணைந்து கலந்துரையாட வேண்டிய இதுபோன்ற பல வாய்ப்புகளை தவறவிட்டோம்.

உங்கள் கருத்துக்களை அரசாங்கத்திடமும், எமது கருத்தை உங்களுக்கும் தெரிவிக்கும் பல வாய்ப்புகள் தவறப்படவிட்டன. எனினும் நீங்கள் உங்கள் பொறுப்புகளையும் கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றியுள்ளீர்கள் என்பதை நான் இந்த தருணத்தில் மறக்கமாட்டேன்.நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுவது இரகசியமல்ல.

பல தசாப்தங்களாக கடனில் மூழ்கியிருக்கும் பொருளாதாரம் இன்று ஒரு குறிப்பிட்ட வரையறையை எட்டியுள்ளது. எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து, அத்தியாவசிய சேவைகளுக்கான இடையூறு மற்றும் அதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் நான் அறிவேன். அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளை ஏற்கனவே செயற்படுத்தியுள்ளோம்.

செயற்படுத்தப்பட்டு வருகிறது.இந்தப் பொறுப்பை வேறொருவர் நிறைவேற்றும் வரை காத்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகளின் விளைவு இப்போது நன்றாகவே புரிகிறது.எனவே, நாட்டில் இந்த வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு, குறுகிய காலத்தில் செய்யக்கூடிய வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.

தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இவற்றினாலேயே எமக்கு பிரச்சினை ஏற்பட்டது. மின்வெட்டை எடுத்துக் கொண்டால், அண்மைக்காலத்தில் மின்வெட்டை நிமிடத்திற்கு நிமிடமேனும் எமக்கு குறைக்க முடிந்துள்ளது. எரிவாயு பிரச்சனையை சில வாரங்களில் தீர்க்கலாம்.

அந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடித்து, அதன் பிறகு பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவது அல்லது குறைப்பது குறித்த விவாதத்தை ஆரம்பிக்க வேண்டும். அதையும் செய்யலாம். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.எங்கள் மீது குற்றம் சாட்டுவது இன்று நேற்று தொடங்கியதல்ல. ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஒவ்வொரு குற்றச்சாட்டு.

அமெரிக்கா, பிரித்தானியா, ஆபிரிக்கா என எல்லா இடங்களிலும் ஏக்கர் கணக்கில் நிலங்கள் இருப்பதாக தற்போது சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். தோட்டங்கள் இருப்பதாகவும், வீடுகள் கட்டியுள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், அவர்கள் ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தனர்.

இதைப்பற்றி பார்த்து, வழக்கு தொடருமாறு நாம் கூறினோம். வழக்கு தாக்கல் செய்து அவற்றை மீள பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவற்றை செய்யாமல் எம்மை வசைப் பாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு அதிகாரம் இருக்கும்போது நிரூபிக்க முடியாதுபோன குற்றச்சாட்டுகளை தற்போது எம் மீது சேரு பூசுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.நாங்கள் இந்த நாட்டிற்காக உழைத்தோம். அது உண்மை. அதுவே உங்களுக்கு தவறாக தெரிகின்றது. போரை முடிவுக்கு கொண்டுவந்தோம்.

அங்கிருந்து முன்னோக்கி நகர்ந்தோமே தவிர பின்னோக்கி நகரவில்லை. ஆனால் நாங்கள் போர் நிறைவுசெய்தோம் என அதை வைத்துக்கொண்டு அரசியல் செய்யவில்லை.ஒரு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். காலிமுகத்திடலில் உள்ள குழுக்களையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களுக்கும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தோம். நாங்கள் பகிரங்க அழைப்பு விடுத்தோம். இன்றும் அந்த அழைப்பை விடுக்கிறேன்.

அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தில் எங்களுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்து அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்குமாறு எதிர்க்கட்சிக்கும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தோம். அவர்களுக்கு வேண்டியது நாட்டைக் கட்டியெழுப்புவது என்றால் எங்களுடன் இணைந்து பணியாற்றுவோம் எனக் கூறினோம். அந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டு இன்று ஊடகங்கள் முன் வந்து நாம் நாட்டை நேசிக்கிறோம் என்று கூறுபவர்களா, உண்மையிலேயே நாட்டை நேசிக்கிறார்கள் என்று கேட்க வேண்டி ஏற்பட்டுள்ளது.போராட்டக்காரர்களுடன் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்வதற்கு பல ஆண்டுகளாக அரசியலில் நாம் அனுபவம் பெற்றுள்ளோம்.

ஆனால் இந்த நேரத்தில் சிலர் நம் நாட்டுக்கு உதவ வேண்டாம் என, நாம் பேச்சுவார்த்தை நடத்தும் நிதி நிறுவனங்களுக்கு, நட்பு நாடுகளுக்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து தெரிவித்து, உழைக்கும் மக்களுக்கு அன்றாட வாழ்வில் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களின் நிம்மதியான வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனால் அது நல்ல விஷயம் இல்லை.நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற அமைப்புகளும் நட்பு நாடுகளும் இந்த நேரத்தில் எமக்கு உதவ முன்வந்துள்ளன. சமீபத்தில் நான் சீனப் பிரதமரிடம் பேசினேன். மற்ற நாடுகளின் பிரதமர்களிடம் பேசினேன். எங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.இந்த பிரச்சினையை குறுகிய காலத்தில் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்நிலையை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, எம்மீது நம்பிக்கை வைத்து, நாட்டில் எம்முடன் மக்களை வைத்திருப்பதற்கு தேவையான பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். என்னை பதவி விலக வேண்டாம் என்று ஒரு கோரிக்கை முன்வைத்தீர்கள். இல்லை நான் பதவி விலகமாட்டேன். பயப்பட வேண்டாம்’ என்று பிரதமர் தெரிவித்தார்.