இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது பெண் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு கிட்டிய வாய்ப்பு, மீண்டுமொருமுறை தவறவிடப்பட்டுள்ளது.
ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கிடையில் பொது இணக்கப்பாடின்மையாலேயே இந்த வரலாற்று வாய்ப்பு கைநழுவிப்போயுள்ளது.

நாடாளுமன்றம் இன்று (17) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

பிரதி சபாநாயகராக இரண்டாவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அப்பதவியை மீண்டும் இராஜினாமா செய்ததால், நாடாளுமன்றத்தில் இன்று பிரதி சபாநாயகருக்கான தேர்வு முதல் விடயமாக நடைபெற்றது.

இதன்போது பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி குமாரி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்மொழிய, அதனை எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற அஜித் ராஜபக்சவின் பெயரை, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பிரேரித்தார்.

இவ்வாறு பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதால், அதற்கு சுதந்திரக்கட்சி, 10 கட்சிகளின் கூட்டணி உள்ளிட்டவை கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

வாக்கெடுப்பின்றி, இணக்கப்பாட்டுடன் பிரதி சபாநாயகர் தெரிவுசெய்யப்பட வேண்டும், எனவே, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி முடிவொன்றை எடுக்குமாறும் வலியுறுத்தினர்.

அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைத்தனர். இதனால் சபையில் கடும் சொற்போர் மூண்டது.

இதனையடுத்து விரும்பினால், இரு வேட்பாளர்களில் ஒருவரின் பெயரை நீக்கிக்கொள்ளுமாறு, பெயரை முன்மொழிந்தவர்களிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார். அதற்கு இரு கட்சிகளும் உடன்படவில்லை.
இறுதியில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் அஜித் ராஜபக்சவுக்கு 109 வாக்குகளும், ரோஹினி குமாரி கவிரத்ன 78 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற அஜித் ராஜபக்ச பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார். ( நிராகரிக்கும் வகையில் வாக்களிப்பு இடம்பெறும் என சுதந்திரக்கட்சி, விமல் தரப்பு என்பன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.)

பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, பொது இணக்கப்பாட்டுடன் தெரிவு செய்யுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை அரச பங்காளியான பொதுஜன பெரமுன ஏற்றுக்கொள்ளவில்லை.

சர்வக்கட்சி அரசு, தேசிய இணக்கப்பாட்டு அரசு என அறிவிப்புகள் வந்தால்கூட, பிரதி சபாநாயகர் தேர்வில்கூட கட்சிகளிடையே இணக்கப்பாடு இன்மை, மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியராக தொழிலாற்றிய ரோஹினி குமாரி கவிரத்ன, தனது கணவரான சஞ்சீவ கவிரத்னவின் மறைவின் பின்னர் தீவிர அரசியலில் இறங்கினார்.
2015 பொதுத்தேர்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் மாத்தளை மாவட்டத்தில் களமிறங்கிய அவர், 41,766 வாக்குகளைப்பெற்று நாடாளுமன்ற அரசியலை ஆரம்பித்தார்.

2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட இவர், 27,587 வாக்குகளைப்பெற்று சபைக்கு தெரிவானார். மாத்தளை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஆசனங்களில் நான்கை மொட்டு கட்சி கைப்பற்றிய நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இவர் மட்டுமே தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

9 ஆவது நாடாளுமன்றத்தில் 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
1.பவித்ராதேவி வன்னியாராச்சி
2.சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே
3.சீதா அரம்பேபொல
4.மஞ்சுலா விஜயகோன்
5.கீதா குமாரசிங்ஹ
6.ராஜிகா விக்ரமசிங்ஹ
7.முதித்தா பிரசாந்தி டி சொய்சா
8.கோகிலா குணவர்தன
ஐக்கிய மக்கள் சக்தி
9. தலலா அத்துகோரள
10.ரோஹினி குமாரி கவிரத்ன
11. டயானா கமகே (ஆளுங்கட்சி பக்கம் தாவிவிட்டார்)
தேசிய மக்கள் சக்தி
12. கலாநிதி ஹரினி அமரசூரிய

இலங்கையில் சபாநாயகர் பதவியை வகித்தவர்கள் விபரம்

1. ஆர். ஏ. த மெல்
2.எச். டபிள்யூ. அமரசூரிய
3.சேர். அல்பேட் பீரிஸ்
4.எச். எஸ். இஸ்மாயில்
5.பியசேன தென்னக்கோன்
6.ஆர். எஸ். பெல்பொல
7.பெர்னாந்து, வர்ணகுலசூரிய
8.டி.ஏ. ராஜபக்ச
9.சீ. எஸ். சேர்லி கொரெயா
10.சேர் றாசிக் பரீட்
11.எம். சிவசிதம்பரம்
12. ஐ. ஏ. காதர்
13.எம். ஏ. பாக்கீர் மாக்கார்
14.நோமன் வைத்தியரத்ன
15.காமினி பொன்சேக்கா
16. அனில் குமார முனசிங்க
17.மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க
18.கீதாஞ்சன குணவர்தன
19.பியங்கர ஜயரத்ன
20.சந்திம வீரக்கொடி
21.திலங்க சுமதிபால
22.ஜே.எம். ஆனந்த குமாரசிறி
23. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
24. அஜித் ராஜபக்ச