இந்திய மக்களால் அனுப்பப்பட்ட ரூ. 2 பில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான உதவிகள் இன்று (22.05.2022) கொழும்பை வந்தடைந்ததோடு, அவற்றை உத்தியோகபூர்வமாக இலங்கையின் வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கையளித்தார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, பிரதமர் பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், உணவு ஆணையாளர் திருமதி ஜே. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பொருட்களில், 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா, 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்துகள் உள்ளிட்ட ஏனைய மருத்துவப் பொருட்கள் உள்ளடங்குகின்றன.
இந்த உதவிப்பொருட்கள், கடந்த மே 18ஆம் திகதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் சென்னை துறைமுகத்தில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்படும் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பாரிய உதவித் திட்டத்தின் கீழ் அனுப்பி வைக்கப்படவுள்ள உதவிப் பொருட்களின் முதற்தொகுதியாக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பங்களிப்பானது 5.5 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிக பெறுமதியானதென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு கையளிக்கப்பட்ட பொருட்கள் எதிர்வரும் நாட்களில் இலங்கை அரசாங்கத்தால் வடக்கு, கிழக்கு, மத்திய, மேல் மாகாணங்கள் உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கஷ்டத்திற்குள்ளான மற்றும் தேவையுடைய பிரிவினருக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
இந்தியாவிடமிருந்து மேலும் அதிகமான மனிதாபிமான பொருட்கள் மற்றும் ஏனைய உதவிகள் தொடர்ச்சியாக வரவுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கமும் மக்களும் மேற்கொள்ளும் இம்முயற்சியானது இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை காண்பிப்பதுடன், இலங்கை மக்களின் நல்வாழ்வுக்கான அவர்களின் அக்கறைகளையும் பிரதிபலிப்பாகும் என, இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவி, கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக, கொவிட் தடுப்பூசி டோஸ்கள், கொவிட் பரிசோதனைக் கருவிகள், 1000 மெட்ரிக் தொன் திரவ ஒட்சிசன் உள்ளிட்டவற்றையும், கடல்சார் அனர்த்தங்களைத் தடுக்க இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் உடனடி உதவிகள் போன்றவற்றின் மூலம் இந்தியாக இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி வழங்கியுள்ளதாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
இணைந்திருங்கள்