21 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

21ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விஷேட கலந்துரையாடல் டார்லி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டதாக இந்த கலந்துரையாடலில் பங்குபற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த திருத்தசட்டமூலத்திற்கு தேவையான யோசனைகளையும் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

நாளைய தினம் இடம்பெறவுள்ள சர்வகட்சி கலந்துரையாடலின் போது அது தொடர்பான யோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் அண்மையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்த போதிலும் 21 ஆவது திருத்த சட்டம் தொடர்பான கட்சியின் இன்றைய கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.