சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முரணான விதத்தில் இலங்கையின் பயங்கரவாத தடை சட்டம் காணப்படுகின்ற காரணத்தினால் அதில் மாற்றங்களை செய்தாக வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நிரைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க வேண்டும். ஆனால் இப்போது நாம் கொண்டுவரும் 21 ஆம் திருத்தத்தை மிகவும் கவனமாக கையாளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சை மட்டும் வைத்துக்கொள்ள முடியும் என்ற திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சர்வசன வாக்கெடுப்புக்கு செல்லாது நிறைவேற்றும் விதமாக இது கொண்டுவரப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் இடைக்கால தீர்மானங்களுக்கு அமைய அமைச்சுகளுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படாதவிடத்து 14 நாட்களுக்கு குறித்த அமைச்சை ஜனாதிபதி வைத்துக்கொள்ள முடியும். அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்துமே பலப்படுத்தப்படும். 20 ஆம் திருத்தத்தில் நீக்கப்பட்ட சகலதும் 21 ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்படும் .

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதில் சட்டத்தின் மீதான குற்றச்சாட்டை விடவும் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டே அதிகமாகும். இது சர்வதேச உடன்படிக்கைகளுடன் முரண்படும் சட்டமாக உள்ளது. எனவே இது குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. இதில் முக்கியமான திருத்தங்களை செய்தாக வேண்டும் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொல்பொருள் சட்டத்திலும் மாற்றங்களை செய்தாக வேண்டும் . இதுவும் நாட்டில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது என நீதிஅமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.