அமெரிக்காவுக்கு அடுத்துள்ள 10 மிகப் பெரிய இராணுவங்கள் ஒட்டுமொத்தமாகச் செலவிடுவதை விட அதிகமாக அதன் ஆயுதப் படைகளுக்குச் செலவிடும் அமெரிக்கா, தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக அதன் இராணுவச் செலவினங்களை அதிகரித்துள்ளது. ஏற்கனவே மிக அதிகபட்சமாக உள்ள பைடெனின் 2023 இராணுவ வரவு-செலவுத் திட்டம், செனட் சபையின் ஆயுதப் படைச் சேவைக் குழுவில் ஒரு வாக்கெடுப்பு நடத்தி மற்றொரு ஆறு சதவீதம் அதிகரிக்கப்பட்டது, மொத்த தொகை 858 பில்லியன் டாலராக உள்ளது.
பைடென் நிர்வாகம் தொடங்கியதில் இருந்து, உக்ரேனுக்கான இராணுவ மற்றும் பொருளாதார உதவியாக அமெரிக்கா 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வழங்க உறுதியளித்துள்ளது. உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கி குறிப்பிடுகையில் அந்நாடு அதன் போர் முயற்சியைத் தொடர ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 60 பில்லியன் டாலர் தேவைப்படுவதாகத் தெரிவித்தார், இந்த தொகை உக்ரேனின் போருக்கு முந்தைய பொருளாதார வெளியீட்டுத் தொகையில் அண்மித்துப் பாதிக்குச் சமமாகும்.
கடந்தாண்டு, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாகப் பைடென் அறிவித்த போது, அவர் கூறுகையில், “நம் தேசம் நீண்ட காலமாகப் போரில் ஈடுபட்டு வந்துள்ளது. இன்று உங்களுக்கு 20 வயது என்றால், உங்களுக்கு ஒரு சமாதானமான அமெரிக்கா தெரிந்திருக்காது,” என்றார். “என்றென்றும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நேரமிது,” என்றவர் அறிவித்தார்.
இப்போது, பைடென் ஒரு புதிய நீடித்த போருக்கு அமெரிக்க மக்களைப் பொறுப்பாக்கி வருகிறார், அதற்கு அர்பணிக்க வேண்டிய வளங்களுக்கு எந்த வரம்புகளும் இல்லை என்றவர் வலியுறுத்துகிறார்.
வியாழக்கிழமை மாட்ரிட்டில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டு பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில், ‘அது அமெரிக்க மக்களுக்கு என்ன அர்த்தப்படுத்துகிறது என்று விளக்குங்கள்’ என்றும், ‘உக்ரேனுக்கு அமெரிக்காவிடம் இருந்து காலவரையின்றி உதவியை’ அவர் உறுதியளிக்கிறாரா என்றும் கேட்கப்பட்ட போது, ‘எத்தனைக் காலம் எடுக்குமோ அது வரையில் நாம் உக்ரேனுக்கு உதவ உள்ளோம்,” என்று பைடென் தெரிவித்தார்.
“அமெரிக்க ஓட்டுநர்களும் உலகெங்கிலுமான ஓட்டுநர்களும் இந்தப் போருக்காக இன்னும் எத்தனைக் காலத்திற்குப் பணம் செலுத்த வேண்டுமென எதிர்பார்க்கலாம்?” என்று கேட்டு, மற்றொரு நிருபர், ‘அமெரிக்காவிலும் உலகெங்கிலும் எரிவாயுவின் விலை உயர்வு’ குறித்து வினவினார்.
“எத்தனைக் காலம் எடுக்குமோ அத்தனைக் காலத்திற்கு,” என்று பைடென் மீண்டும் ஆணித்தரமாகக் கூறினார்.
‘அதற்கு’ எவ்வளவு காலம் எடுக்கும்? இந்த முடிவில்லா போருக்கான செலவு என்ன, இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? என்று மிகவும் வெளிப்படையான கேள்வியைப் பைடெனிடம் யாரும் கேட்கவில்லை.
மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும், அதுவே ஓர் அணு ஆயுதப் போராக அபிவிருத்தி அடைந்தால், மனிதகுலத்தின் தலைவிதியையே அச்சுறுத்தும், ஓர் உலகளாவிய மோதலுக்கு அமெரிக்கா தலைமைத் தாங்குகிறது.
அனைத்திற்கும் மேலாக, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவுக்கு எதிரான போருடன் சேர்ந்து, உலகின் அந்த மிகப் பெரிய நாட்டின் அரசாங்கத்தைத் தூக்கியெறிவதை நோக்கமாகக் கொண்ட ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போர், அமெரிக்க மக்களை முற்றிலும் வறுமையில் ஆழ்த்தாமல் செய்ய முடியும் என்று யாராவது கற்பனையாவது செய்ய முடியுமா?
நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் சூளுரைத்த சமூக இராணுவமயமாக்கலின் சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் கணக்கிட முடியாதவை. ஒவ்வொரு நாட்டிலும், போர் நடவடிக்கைகளுக்கு ஆதார வளங்களை ஒதுக்குவதற்காகப் பொது சுகாதாரம் மற்றும் சமூக உள்கட்டமைப்பிற்கான அரசு செலவினங்கள் வெட்டப்படும்.
சமூகத் திட்டங்களை அகற்றுவதன் மூலமும், ‘தேசிய நலன்’ என்ற பெயரில் நிஜமான சம்பளக் குறைப்பைத் தொழிலாளர்கள் ஏற்க வேண்டும் என்று கோருவதன் மூலமும் இந்தப் போர்ச் செலவுகள் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட உள்ளன.
கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் முற்றிலுமாகக் கைவிட்டதும் இந்தப் போர் வெடிப்புடன் சேர்ந்துள்ளது. அமெரிக்க அரசு மதிப்பீடுகளின்படி, இந்த இலையுதிர்க் காலத்தில் 100 மில்லியன் புதிய கோவிட்-19 நோயாளிகள் இருப்பார்கள், இது இதுவரை முன்னர் பதிவு செய்யப்பட்ட மொத்த கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கையை விட அதிகமாகும். இந்தப் பெருந்தொற்றுக்கு எந்தவொரு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை நிறைவேற்றவும் காங்கிரஸ் சபை மறுத்துள்ளது, அதாவது காப்பீடு செய்திராதவர்கள் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், பரிசோதனைகள், சிகிச்சைகளுக்கும் தங்களின் சொந்தச் செலவில் பணம் செலுத்த நிர்பந்திக்கப்படுவார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.
அரசுப் பள்ளிகளுக்கான நிதியை 215 மில்லியன் டாலர் குறைப்பதாக இந்த வாரம் நியூ யோர்க் நகரம் அறிவித்தது, நாடெங்கிலும் சிக்கன நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, இந்தப் போர் ‘தகுதி உடையவர்களுக்கான நலச் சலுகை’ செலவினங்களைக் குறைப்பதற்கான கோரிக்கைகளைத் தூண்டியுள்ளது. ‘நேட்டோவுக்குத் துப்பாக்கிகளை அதிகரிக்கவும் மற்றும் வெண்ணெய்யைக் குறைக்கவும் தேவைப்படுகிறது’ என்று பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சிலின் முன்னாள் தலைவரான க்ளென் ஹப்பார்ட் இந்தாண்டுத் தொடக்கத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஒரு பொதுத் தலையங்கப் பக்கத்தில் எழுதுகையில், சமூகப் பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் மருத்துவ உதவிக்கான செலவினங்களில் வெட்டுக்களை அவர் கோரி இருந்தார். ‘பாதுகாப்புச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப செலவினங்களை ஈடுகட்டுவதற்கு நிச்சயமாகச் சமூகக் காப்பீட்டுச் செலவின அதிகரிப்பை மெதுவாக்குவது அவசியமாக இருக்கும்,” என்றவர் எழுதினார்.
பல தசாப்தங்களாக வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்புகளின் பின்னணியில் செய்யப்பட்ட கட்டுப்பாடற்ற இராணுவச் செலவுகள் பணவீக்க நெருக்கடிக்குப் பங்களித்துள்ள நிலையில், அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் இந்த நெருக்கடியின் மொத்த சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த முயன்று வருகிறது. பெடரல் ரிசர்வ் வேண்டுமென்றே வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்க முற்படும் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது, நூறாயிரக் கணக்கானவர்களை வேலையிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் தொழிலாளர் சந்தையில் ‘சமநிலையை’ மீட்டெடுக்கும் நம்பிக்கையில் அது உள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் தொடங்கி, வாகனத் தொழில் துறையில் பரவி வரும், பணிநீக்கங்களின் ஒரு பேரலைக்கு எதிராக இந்தப் போர் தீவிரப்படுத்தல் நடைபெறும். ஒரு கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, கடந்த மாதம் தொழில்நுட்பத் துறையில் மட்டும் 26,000 பணிநீக்கங்கள் இருந்தன, இது அதற்கு முந்தைய மாதத்தை விட 20,000 அதிகமாகும்.
பைடென் நிர்வாகத்தால் தொடங்கப்பட்டு வரும் இந்த உலகளாவிய போர், அதே நேரத்தில் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு போராகவும் உள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம், போரின் மூலம், ஒரு வெளிப்புற எதிரியை உருவாக்கி உள்நாட்டுப் பதட்டங்களை வெளிப்புறமாகத் திசைதிருப்ப முயல்கிறது, அதே நேரத்தில் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூகப் போராட்டங்களை நசுக்க அடக்குமுறைச் சக்திகளைக் கட்டமைத்து வருகிறது.
ரஷ்யாவுடனான போரில் வரம்பின்றி அமெரிக்கா தலையீடு செய்ய பைடென் பொறுப்பேற்றிருப்பதை ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் ஆதரிக்கிறது. நேட்டோ உச்சி மாநாட்டின் தீர்மானங்களை, ஜனநாயகக் கட்சியுடன் அணி சேர்ந்த நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்டில் இருந்து, குடியரசுக் கட்சியுடன் அணி சேர்ந்த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வரை பிரதான அமெரிக்க பத்திரிகைகளின் ஆசிரியர் குழுக்கள் வரவேற்று இருந்தன.
‘ஜனாதிபதி பைடெனின் பதவிக் காலத்தில் வேறு என்ன நடந்தாலும், இந்தப் பதவிக்காலம் எவ்வளவு காலம் நீடித்தாலும் சரி, ஐரோப்பாவின் இந்த வார நிகழ்வுகள் அவரின் ஜனாதிபதி பதவியின் விளைவுகளில் ஒன்றை உறுதிப்படுத்தும்,” என்று போஸ்ட் அறிவித்தது.
காங்கிரஸ் சபையில் உள்ள ஒரேயொரு ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கூட இந்தப் போர் முயற்சிக்கு முடிவின்றி ஆதார வளங்களை வழங்கும் பைடெனின் உறுதிமொழியை விமர்சிக்கவில்லை.
ரஷ்யா மற்றும் சீனா மீது மக்கள் வெறுப்பை உற்சாகப்படுத்தும் நோக்கில் முடிவில்லா பிரச்சார மழை இருந்தாலும், உக்ரேனியப் போருக்கு மக்கள் மத்தியில் பரந்த ஆதரவு எதுவும் இல்லை. இவ்வாரம் வெளியான YouGov கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில், 40 சதவீதம் பேர் அமெரிக்கா ‘உலகெங்கிலுமான மோதல்களில் இராணுவ ரீதியில் குறைவாகவே ஈடுபட’ வேண்டும் என்று கூறி இருந்தார்கள், இதனுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் பேர் மட்டுமே அதிகமாக ஈடுபட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பைடெனின் முதல் முன்னுரிமை என்னவாக இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு, 38 சதவீதம் பேர் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு வெள்ளை மாளிகைத் தீர்வு காண வேண்டும் என்று கூறினர், இதனுடன் ஒப்பிட்டால் 8 சதவீதம் பேர் மட்டுமே அமெரிக்கா ‘உக்ரேனில் ரஷ்யாவின் தோல்வியை உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறினர்.
அந்தக் கருத்துக் கணிப்பில் பதில் அளித்தவர்களில் 46 சதவீதம் பேர், ‘ரஷ்யா-உக்ரேன் போரில் அமெரிக்க இராணுவம் நேரடியாகப் போரில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம்’ என்று கூறி இருந்தனர், இதனுடன் ஒப்பிட்டால் வெறும் 23 சதவீதத்தினர் மட்டுமே அத்தகைய ஒரு நகர்வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, யேமன் மக்களுக்கு எதிராகவும் மற்றும் அமெரிக்காவின் நிலைகுலைக்கும் நடவடிக்கைகள், பினாமிப் போர்கள், படுபாதகமான பொருளாதாரத் தடையாணைகளுக்கு உள்ளாக்கப்பட்ட டஜன் கணக்கான பிற நாட்டு மக்களுக்கு எதிராகவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய குற்றங்களை அமெரிக்க மக்கள் மறந்து விடவில்லை.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்த் திட்டங்களுக்கு எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் எதிர்ப்பும் இல்லை. ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டி எழுப்புவதற்கான சமூக அடித்தளம் தொழிலாள வர்க்கமாகும். வெளிநாட்டில் ஏகாதிபத்திய போரும் அதே நேரத்தில் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான போரும் நடத்தப்படுவதைப் போல, போருக்கு எதிரான போராட்டமும் அதே நேரத்தில் சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்பு முறைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு போராட்டத்துடன் நடத்தப்பட வேண்டும்.
இணைந்திருங்கள்