19 கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள், தங்கக்கட்டிகள், வெளிநாட்டு பணம் ஆகியவற்றை கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியில் எடுத்துச் செல்ல முயற்சித்த மூன்று பேர் நேற்றிரவு சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 கிலோ கிராம் எடைக்கொண்ட தங்க ஆபரணங்கள், தங்கக்கட்டிகள், 75 ஆயிரம் அமெரிக்க டொலர்கள், 18 ஆயிரம் யூரோக்களை சந்தேக நபர்கள் தமது பயண பொதிகள் மற்றும் அணிந்திருந்த காற்சட்டையில் வடிவமைக்கப்பட்டிருந்த விசேட பைகளுக்குள் மறைத்து எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 53 மற்றும் 42 வயதான இந்தியர்கள், இரண்டு நாடுகளின் விமான நிலையங்கள் ஊடாக தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை கடத்திச் செல்வதை தொழிலாக கொண்டவர்கள் என்பது சுங்க அதிகாரிகளின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள 46 வயதான இலங்கை நபர், அடிக்கடி விமான பயணங்களை மேற்கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர் எனவும் சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து பெருந்தொகையான தங்க ஆபரணங்கள் மற்றும் தங்கக்கட்டிகளை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கடத்தி வந்து, அவற்றை சிறிய தொகைகளாக பிரித்து, விமான நிலையத்தில் பயணிகள் முனையத்தில் இருக்கும் வர்த்தகர்கள் மற்றும் கடத்தல்காரர்களிடம் வழங்கி, வெளியில் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது சுங்க அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
நேற்றிரவு டுபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமானம் மற்றும் இந்தியாவின் புது டெல்லியில் இருந்து இன்று அதிகாலை 1.40 அளவில் வந்த இந்திய விமானத்தில் இந்த தங்க ஆபணரங்களும், தங்கக்கட்டிகளும், வெளிநாட்டு பணமும் இலங்கைக்கு கடத்தி வரப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய பிரதி சுங்க பணிப்பாளர் யு.டி.பீ.அலவத்துகொட, தங்க ஆபணரங்கள், தங்கக்கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பணத்தை அரசுடமையாக்க உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா வீதம் 75 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்