எத்தனை கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது. ஆனால், எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவி செய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை. ஒருவருடைய பதவியை விட நாட்டில் வாழும் ஏறத்தாழ இரண்டு கோடி மக்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் இங்கு கவனிக்கப்பட வேண்டியது என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடனுக்கு மேல் கடன். கடனுக்கு வட்டி வேறு. இந்திய அரசு பெற்றோலை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்து 40 வீத இலாபத்தை வைத்து நமது நாட்டுக்கு தருகிறார்கள்.
உதாரணமாக 500 மில்லியன் டொலரை தந்து விட்டு 1000- 2000 மில்லியன் டொலர் பெறுமதியான இலங்கையின் சொத்தை எழுதி வாங்கிக்கொள்கிறார்கள். இந்த அரசாங்கம் ஆட்சியிலிருக்கும் ஒவ்வொரு நாளும் எமது நாடு பங்குரோத்தான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இப்போது நாங்கள் அனுபவித்துக்கொண்டிருப்பதல்ல கஷ்டம். இனித்தான் நாம் அதிக கஷ்டங்களை அனுபவிக்கப் போகின்றோம். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு இந்த அரசாங்கம் தொடர்ந்தால் விளைவு மிகமோசமாக இருக்கும். இந்த அரசாங்கம் நாட்டின் நிலையைக் கருத்திற்கொண்டு உடனடியாக பதவிகளை இராஜினாமாச்செய்து, இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் திறமையானவர்களிடம் நாட்டைக் கையளித்து விட்டு ஒதுங்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டின் ஆட்சியாளர்கள் அதிகாரத்திலிருந்து ஒதுங்கும் வரை இலங்கைக்கு உதவ முன்வராது என்றார்.
இணைந்திருங்கள்