எஸ்.றிபான் –
அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணியும் பொதுக் கூட்டமொன்றும் அட்டாளைச்சேனையில் நடைபெற இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தின் கொள்கை அமுலாக்கத்தில் காணப்படும் குறைபாடே பிரதான காரணமாகும்.
அத்தியாவசியப் பொருட்களுக்கு நாளாந்தம் பல மணி நேரங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் பொருட்களின் விலைகளும் சடுதியாக நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மொத்த வியாபாரிகள் பொருட்களை பதுக்கி வைத்து கொள்ளை இலாபம் ஈட்டும் செயற்பாடுகளும் தொடர்கின்றன. தினமும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நேற்று 10 மணிநேர மின்துண்டிப்பு பல பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டன.
இந்த நெருக்கடியினால் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் மக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய அரசாங்கத்தின் தோற்றத்திற்கான முதலீடு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களேயாகும். முஸ்லிம்களை தேசப்பற்று இல்லாதவர்கள், பயங்கரவாதிகள் போன்று காட்டியே அதிகாரத்தைப் பிடித்தார்கள். இவர்களின் இத்தகைய இனவாதக் கொள்கைக்கு வாக்களித்த மக்களே தற்போது அரசாங்கத்திற்கு எதிராக கடும் போராட்டங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
மேலும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் முஸ்லிம்களின் அரசியல், பொருளதாரம், சமூக வாழ்வியல், மதவிழும்மியங்களின் மீது எதிர்மறைத் தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ளன. முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மீதும்இ புத்திஜீவிகள் மீதும் அத்தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளும், வேண்டுமென்று முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பௌத்த சிங்கள மக்கள் சந்தேகப்படவும் செய்தார்கள். ,ஆனால், தற்போது முஸ்லிம்களை தவறாக புரிந்துவிட்டோம். அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள நினைத்த தரப்பினருக்கு பலியாகி விட்டோம் என்று கவலை கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். பல பௌத்தர்கள் தங்களின் இந்த நிலைப்பாட்டை சமூக ஊடகங்களில் பகிரங்கமாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களைப் பற்றிய இந்த புரிதலுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பிரதான பங்களிப்பு செய்துள்ளது என்பதனை யாரும் மறுக்க முடியாது. ஆதலால், முஸ்லிம்கள் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் குறித்து பௌத்த இனவாதிகளினால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உள்ள உண்மைத் தன்மையையும், அதன் பின்னணியில் உள்ள அரசியல் காரணிகளையும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும். அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை, சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
ஆனால், நமது அரசியல்வாதிகளும், ஏனைய தலைவர்களும் இந்த முக்கிய பணியைச் செய்யாது மௌனித்துப் போயுள்ளார்கள். அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருடிக்கடிக்கு முஸ்லிம்களின் மீது திட்டமிட்டு சுமத்திய குற்றச்சாட்டுக்களினால் ஏற்பட்ட எங்களின் சாபமே காரணமாகும் என்று அறிவிலிகள் போன்று அரசியல் தலைவர்கள் முதல் ஏனைய தலைவர்களும் பகிரங்கமாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
இத்தகைய கருத்துக்கள் எங்களின் மீது சிங்கள மக்களிடையே ஏற்பட்டுள்ள அனுதாபத்தை இல்லாமல் செய்துவிடும். எங்களின் பக்கமுள்ள நியாயத்தை புரிந்து கொள்வதற்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பை திசை திருப்பிவிடும். ஆதலால், வார்த்தைகளை பக்குவமாக பயன்படுத்துவது அவசியமாகும். இத்தகையதொரு பின்னணியில்தான் முஸ்லிம் காங்கிரஸ் பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்டவைகளை முன் வைத்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணியையும், பொதுக் கூட்டமொன்றையும் நடத்தவுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் இந்த எற்பாடு முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. இதில் சமூக நோக்கு எதுவும் கிடையாது. இதற்கு முஸ்லிம் காங்கிரஸின் கடந்த கால செயற்பாடுகள் நல்ல சாட்சியாகும்.
இன்றைய அரசியல் சூழலில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்க்கட்சியில் உள்ளார். அக்கட்சியின் 04 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் உள்ளார்கள். கட்சியின் பல தீர்மானங்களை புறக்கணித்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் அரசாங்கத்திற்கு வழங்கிக் கொண்டிருப்பதன் பின்னணியில் கூட சமூக நோக்கு கிடையாது. பச்சை சுயநலமே உள்ளது.
இன்றைய ஆட்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்த சிங்கள மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், அதற்குள் முஸ்லிம்களும் காலை ஊன்ற வேண்டியதில்லை. இனவாதிகள் இன்னமும் தமது முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கைவிடவில்லை. அதற்கு ஆட்சியாளர்களும் இன்றுவரை அனுசரணையாளராக இருந்து கொண்டிருப்பது பொய்யானதல்ல.
சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து கொண்டிருக்கின்ற அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் போராட்டத்தை நடத்துகையில் அது அரசாங்கத்தின் இறங்கு முகத்தை சரி செய்து கொள்வதற்கு கூட வாய்ப்பாகிவிடும். ஆதலால், முஸ்லிம்கள் நாட்டின் மீது அதிக விசுவாசம் கொண்டவர்கள். எங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் போலியானவை. நாங்கள் இஸ்லாமிய விழும்மியங்களையும், கலாசாரத்தையும் பின்பற்றுவதனையும்,,அதன் ஊடாக நாட்டின் பொருளாதரத்திற்கும், அரசியலுக்கும் பங்களிப்புச் செய்கின்றவர்கள். தனி அலகோ, ஆட்சி அதிகாரமே கேட்டு ஆட்சியாளர்களை இக்கட்டில் மாட்டிவிடும் தரப்பினரல்லர் என்று சிங்கள மக்களை புரிய வைக்க வேண்டும்.
எங்களின் மீது திட்டமிட்டு தாக்குதல்களை மேற்கொண்டு, எங்களின் மதவிழும்மியங்களை தடை செய்வதனையும், ஒரே நாடு ஒரே சட்டம் என்பதனூடாக எங்களை நசுக்குவதற்கு எடுக்கப்படும் நடைமுறைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று எங்கள் பக்கத்து நியாயத்தை தெளிவுபடுத்த வேண்டும். அதுவே எமது இன்றைய பணியாகும். இதற்கு இன்று ஏற்பட்டுள்ளதை நெருக்கடி நிலையே சாதகமாகும் என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் மீது மகிந்தராஜபக்ஷ காலத்திலும், நல்லாட்சியிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்;டன. இக்காலப் பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்தன. அமைச்சர் பதவிகளையும் பெற்றிருந்தார்கள்.
ஆட்சியில் பங்காளி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற எதனையும் இழக்க விரும்பாத முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்படி இரு அரசாங்கத்திற்கு எதிராக எந்தவொரு போராட்டத்தையும் நடத்தவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற அம்பாறை மாவட்;டத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தைக் கூட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நடத்தவில்லை. ஆட்சியாளர்களின் அனைத்து அநியாயங்களையும் ஏற்றுக் கொண்டார்கள். வாய்பொத்தி நாங்கள் உங்கள் அடிமைகள். எங்களின் சலுகைகளில் கைவைத்துவிடாதீர்கள். எங்கள் சமூகனத்திற்கு எதிராக எதனை வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள் என்பது போலவே முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை இருந்தார்கள்.
அவ்வாறு அன்று இருந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தீர்மானமானது முஸ்லிம் சமூகத்தின் மீதும்,,ஆட்சியாளர்கள் மீதும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இல்லாமல் செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சியாகவே இருக்கின்றது. மேலும், சரிந்து கொண்டிருக்கின்ற ஆட்சியாளர்களின் செல்வாக்கை உயர்த்துவதற்கு கூட ஆட்சியாளர்கள் முஸ்லிம் காங்கிரஸின் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். அந்த கைதுகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தாமல் மௌனமாய் இருந்தது எதற்காக?
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டமானது முஸ்லிம்களின் மதவிழும்மியங்களை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் சதியாகும். இந்த சதியை நிறுத்துமாறு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்திலும், சாத்தியமான ஏனைய மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தி அரசாங்கத்தை கண்டிக்காது இருந்தமைக்கான காரணமென்ன?
முஸ்லிம்களின் விவாக விவாக ரத்துச் சட்டம், காழி நீதிமன்ற முறை போன்றன திட்டமிட்ட அடிப்படையில் இல்லாமல் செய்வதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் ஏன் வீதிக்கு இறங்கவில்லை.
முஸ்லிம்களின் வாக்குகளினால் அரசியல் செய்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம்களின் மீது மாத்திரம் நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு போராட்டத்தையும் நடாத்தாத முகத்தை வைத்துக் கொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருடிக்கடி எதிராக மீசையை முறுக்குவது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.
மேலும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முஸ்லிம்கள் மீதே பழியை சுமத்தியது. அக்குழுவின் விதந்துரைப்புக்களில் மத்ரஸாக்கள் மூடப்பட வேண்டும். அல்லது குறைக்கப்பட வேண்டும். ஹிஜாப் மற்றும் புர்கா என்பன தடை செய்யப்பட வேண்டும் என முன் வைத்த பரிந்துரைகள் முஸ்லிம்களின் வாழ்வியலை நாசமாக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. இக்குழுவில் ரவூப் ஹக்கீமும் இருந்தார். இக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்ட போது அதற்கு எதிராக எக்கருத்தையும் வெளியிடாது ஒப்புதல் கொடுத்த ஒருவராகவே அவர் உள்ளார்.
ஆதலால், 2022 ஏப்ரல் 01ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் நடத்தவுள்ள போராட்டம் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருக்கும், தலைவராகிய ரவூப் ஹக்கீமுக்கும் இடையே அவர்களின் செல்வாக்கை எடை போடப்படுகின்ற போராட்டமாகும். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையோடும், கட்சியோடும் விசுவாசமின்றி இருந்தாலும், அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் கட்சியோடும், தலைமையோடும் உள்ளார்கள் என்று பலப்பரீட்சை காட்டும் தளமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள். கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்குகொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்று கேட்கிறோம்.
மேலும், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக முஸ்லிம்கள் பேரணி நடத்துவதில் என்ன தவறுள்ளதென்றும் சிலர் கேட்கின்றார்கள். முஸ்லிம்களும் போராட்டம் நடத்த வேண்டும்தான். அதற்குரிய காலம் இதுவல்ல. இக்காலம் எம்மை தூய்மையானவர்கள் என்று காட்ட வேண்டிய காலமாகும். நூங்கள் குற்றமற்றவர்கள் என்று காட்டுவதற்குரிய சான்றுகளை முன் வைக்கும் காலமாகும்.
மேலே சொல்லப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து சர்வதேசம் பேசும் நிலையை உருவாக்க முடியாத நிலையிலேயே முஸ்லிம் கட்சிகள் உள்ளன. முஸ்லிம் கட்சிகள் சமூக அரசியலில் தோல்வி அடைந்துள்ளன. அத்தோல்வி அரசியலையே முஸ்லிம் சமூகத்தின் அரசியலாக காட்டிக் கொண்டு இருக்கின்றமையை முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது. எமது எந்தவொரு அரசியல் நகர்வும் சமூகத்திற்கு துரோகம் செய்வதாக அமைந்துவிடக் கூடாது. சமூகத்தை நெருக்கடியில் தள்ளுவதாகவும் இருக்கக் கூடாது. எமது நடவடிக்கைகள் ஆட்சியாளர்களுக்கு தீனி போடுவதாக அமைந்துவிடக் கூடாது.