கடவுச்சீட்டு பெறுவதற்காக, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண் வரிசையில் காத்திருந்த போது அவருக்கு பிரசவ வலிக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து, அலுவலகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் பெண்ணை, பொரளை – காசல்வீதி மகளிர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் மகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண் ஏறக்குறைய இரண்டு நாட்களாக இந்த வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரிசைகள்
இந்த நாட்களில், இலங்கை முழுவதும் பல்வேறு அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்காக பல வரிசைகள் உருவாகின்றன, அவற்றில் முக்கியமானவை எரிபொருளைப் பெறுவதற்கான வரிசைகள் மற்றும் குடிவரவுத் திணைக்களத்திற்கு முன்னால் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான வரிசைகள்.
குடிவரவுத் திணைக்களத்தினால் தற்போதும் கையாள முடியாத வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையால் மக்கள் இந்த வரிசையில் பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
மேலும், நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட இந்த எரிபொருள் வரிசைகள் மற்றும் பிற வரிசைகளில் இதுவரை பல இறப்புகள் பதிவாகியுள்ளன, வரிசையில் ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்தது இதுவே முதல் முறை
இணைந்திருங்கள்