இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பொருளாதார வீழ்ச்சி காரணமாக சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு, வியாழன் அன்று ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார் என நாடாளுமன்ற சபாநாயகரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த அறிவிப்பு தலைநகரான கொழும்பில் மகிழ்ச்சியைத் தூண்டியது. ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கூடியிருந்த பெருந்திரளான போராட்டகாரர்கள் ஊரடங்குச் சட்டத்தை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபக்சவின் முதல் பெயரை கேலி செய்யும் வகையில் கோட்டா கோ கம போராட்ட தளத்தில் மக்கள் பட்டாசுகளை வெடித்தும், கோஷங்கள் எழுப்பியும், நடனமாடியும் பரவசமடைந்தனர்.

முழு நாடும் இன்று கொண்டாடும் என்று போராட்ட களத்தில் இருந்து ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு பெரிய வெற்றியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு தசாப்தங்களாக  இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ச குடும்பத்தைப் பற்றி குறிப்பிடுகையில், நாங்கள் அவர்களிடமிருந்து இந்த நாட்டை விடுவிப்போம் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை, என்று அவர் மேலும் கூறினார்.

ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை வியாழன் பிற்பகுதியில் மின்னஞ்சல் மூலம் சமர்ப்பித்ததாகவும், ஆவணம் சட்டப்பூர்வமாக சரிபார்க்கப்பட்டவுடன் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாகிவிடும் என்றும் சபாநாயகரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ராஜபக்ச புதன்கிழமை மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்று வியாழன் அன்று சவுதி அரேபிய விமானத்தில் சிங்கப்பூர் சென்றார் என்று நிலைமையை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவியுடன் போக்குவரத்து விஜயம் மேற்கொண்ட இலங்கை விமானப்படை விமானத்திற்கு நாடு தூதரக அனுமதி வழங்கியுள்ளதாக மாலைதீவு அரசாங்கம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

பெயர் குறிப்பிட மறுத்த விமானத்தில் பயணித்த ஒருவர், ராஜபக்சவை பாதுகாப்புக் காவலர்கள் குழு சந்தித்ததாகவும், விமான நிலைய விஐபி பகுதியிலிருந்து கருப்பு வாகனங்களின் தொடரணியில் வெளியேறியதாகவும் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக நாட்டிற்குள் நுழைந்ததாகவும், அவர் புகலிடம் கோரவில்லை அல்லது வழங்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதனன்று தனது சகாவான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தற்காலிக ஜனாதிபதியாக்க ராஜபக்ச எடுத்த முடிவு மேலும் எதிர்ப்புகளைத் தூண்டியது, ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தையும் பிரதமரின் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு அவரும் பதவி விலகக் கோரினர்.

ரணில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், என்று நாடாளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 29 வயதான இளைஞர் ஒருவர் குறிப்பிட்டார்.  

அவர்கள் நாட்டை விற்றுவிட்டார்கள், ஒரு நல்ல நபர் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அதுவரை நாங்கள் நிறுத்த மாட்டோம் என்று அவர் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.