நாட்டில் கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முக்கிய உத்தரவொன்றை வழங்கியுள்ளார்.

அதன்படி இன்று பிற்பகல் 3 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்தும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வான்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் அது தொடர்பில் இனிவரும் காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. இதன்போதே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

Gallery

மேலும், நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மீன்பிடி, சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளுக்கு போக்குவரத்து சபை டிப்போக்கள் மற்றும் இராணுவ முகாம்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

அத்துடன், எரிபொருட்களை பதுக்குபவர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், வரிசைகளில் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்து அதனை வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குழுக்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.