ஜனாதிபதிக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம்

– நாட்டுக்குள் டொலர் வரும் வழிகளை உருவாக்க வேண்டும்

– IMF இடம் 03 பில்லியன் டொலரை 03 வருடத்தில் பெற நடவடிக்கை

– நிதி அமைச்சராக அறிவித்து அமைச்சர் அலி சப்ரி உரை

நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இந்நிலையில் ஸ்திரத்தன்மையை பேணினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடி நிலைமையிலிருந்து மீள முடியும். அரச முறை கடன் செலுத்தல் மீள்பரிசீலனை செய்யப்பட்டு கடன் செலுத்தலுக்காக கால அவகாசம் பெற்றுக் கொள்வது அவசியமாகுமென நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி 08.04.2022 அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்கவும், பிரச்சினைக்கு தீர்வு காணவும் எதிர் தரப்பினர் தயாராகவில்லை. ஆகவே இது அரசியல் செய்யும் தருணமல்ல.

சிறந்த நோக்கத்துடன் ஜனாதிபதி நாட்டை நிர்வகித்தார். ஒரு சிலரது தவறான தீர்மானங்களினால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். தீர்மானமிக்க சூழ்நிலையில் எம்மால் சுயநலமாக செயலாற்ற முடியாது. ஜனாதிபதிக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு எவ்விதத்திலும் வங்குரோத்து அடையவில்லை.தற்போதைய நிலையில் நாட்டை பலப்படுத்த வேண்டும். டொலர் வரும் வழிகளை உருவாக்க வேண்டும். செலுத்த வேண்டிய கடனை மீளச்செலுத்துவதை ஒத்திவைத்து அதற்காக கால அவகாசம் பெற்று நெருக்கடி நிலையை சீர் செய்ய வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் 03 பில்லியன் டொலர்களை 03 வருட காலத்துக்கு பெற்றுக்கொள்ளலாமெனவும் அத்தோடு உலக வங்கி,ஜப்பான் போன்றநாடுகள் உதவலாமென்றும் தெரிவித்தார். தகுதியான எவரும் பொறுப்பேற்காத நிலையில் நிதி அமைச்சு பொறுப்பை மீள ஏற்றதாக தெரிவித்த அவர், எத்தகைய விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், அவமதிப்புகள் வந்தாலும் நாட்டுக்காக முடிந்தளவு தனது பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடிக்கு யார் பொறுப்பு என விரல் நீட்டிக் கொண்டிருப்பதால் எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. கடந்த 02 வருடத்தில் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிட்டது. 2016 இல் 2020 வரையான காலப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படவில்லையென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 2017-/18 காலப்பகுதியில் கிடைத்த நிதி திட்டமிடலின்றி செலவிடப்பட்டுள்ளது தொடர்பில் சிக்கல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது காலத்தில் சில விடயங்களை தொலைநோக்குடன் மேற்கொள்ளாதது தொடர்பில் பிரச்சினை உள்ளது. சில வரிச்சலுகைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.