ஜனாதிபதியை தெரிவு செய்ய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தனியான அணியாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.
இந்த அணியில் பொதுஜன பெரமுனவை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவதாக தெரியவருகிறது.
டளஸ் அழகப்பெரும தலைமையிலான இந்த அணியில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் சன்ன ஜயசுமண, கலாநிதி நாலக கொடஹேவா உள்ளிட்டோரும், பொதுஜன பெரமுனவின் மனசாட்சிப்படி செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த அணியினர் எதிர்காலத்தில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தி வருவதாக அறியகிடைத்துள்ளது.
இதனிடையே அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.வெகுஜன அமைப்புகள்,தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் இணைந்துக்கொண்டு, நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பிலான எதிர்கால வேலைத்திட்டம் குறித்து சரியான புரிதலுக்கு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
இதற்காக தேசிய சபையை உருவாக்க வேண்டும் எனவும் அதனை எதிர்வரும் செவ்வாய் கிழமை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஸ்தாபிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தேசிய சபைக்கு வரும் முற்போக்கான யோசனைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகள் கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தை சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இணைந்திருங்கள்