மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உடனடியாக 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள பல தேயிலை தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தவகையில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா கிளன்டில்ட் தோட்டத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது. அத்தோடு, லக்ஷபான மற்றும் பிரவுன்ஸ்வீக் தோட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள ஏனைய பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் உள்ள அனைத்து தேயிலை தோட்டங்களிலும் நாளாந்த சம்பளம் 1000/- முதல் 1200/- வரை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் மட்டும் ரூ.1000/-க்கு குறைவான சம்பளம் கொடுத்து அதிக லாபம் பெற்று அப்பாவி தோட்டத் தொழிலாளர்களை ஒடுக்கப்படுவதாகவும், தோட்டத் தொழிலாளர்கள், தற்போது கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதாகவும்,, மூன்று வேளை உண்பவர்கள் தறபோது ஒரு வேளை மாத்திரமே உண்பதாகவும், குழந்தைகளுடன் வறுமையில் வாடுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் பட்டினியால் இறக்க நேரிடும் எனவும் தெரிவித்தனர்.

க.கிஷாந்தன்