போதுமான ஆதரவு திரட்ட முடியாத நிலையில், பிரதமர் போட்டியில் இருந்து விலகுவாதாக முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். தனது கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உரிய பலனைத் தராத நிலையில், நாடாளுமன்றத்தில் கட்சியின் ஒருமித்த ஆதரவு இல்லாத போது, திறம்பட ஆட்சியை முன்னெடுப்பது கடினமான விடயம் என போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமது கட்சி முன்வைத்துள்ள 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு என்ற எண்ணிக்கையை போரிஸ் ஜோன்சனால் எட்ட முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

ஏற்கனவே ரிஷி சுனக் 150கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவை திரட்டியுள்ள நிலையில், போரிஸ் ஜோன்சனால் வெறும் 60 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே திரட்ட முடிந்துள்ளது.

இதனாலையே, போரிஸ் ஜோன்சன் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தமக்கு 102 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறினாலும், இதுவரை அவர் பட்டியலை வெளியிடவில்லை.

இது அருமையான வாய்ப்பு என கூறினாலும், இறுதியில் இது உரிய நேரமல்ல என முடித்துள்ளார். இன்னொரு போட்டியாளரான Penny Mordaunt என்பவருடன் கலந்தாலோசித்த போரிஸ் ஜோன்சன், அவரை போட்டியில் இருந்து விலக வைக்க முடியாமல் போனது.

இதுவரை 25 உறுப்பினர்கள் மட்டுமே Penny Mordaunt பிரதமராக வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், தாம் பிரதமராக போட்டியிட இருப்பதாகவும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தம்மை ஆதரிக்க வேண்டும் என ரிஷி சுனக் வெளிப்படையாக அறிவித்த நிலையிலேயே, போரிஸ் ஜோன்சன் தனது முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் திங்கட்கிழமை அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.