” பஸில் ராஜபக்ச இலங்கையில் அரசியலில் ஈடுபடுவதை எவராலும் தடுக்க முடியாது. தடை ஏற்படுத்தவும் முடியாது.  நாடு திரும்பிய கையோடு  கட்சியை அவர் வெற்றிகரமாக வழிநடத்துவார். இரட்டை குடியுரிமை தடைமூலம் அவரின் பயணத்துக்கு கடிவாளம் பூட்ட முடியாது.”

இவ்வாறு  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே  அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இங்கிலாந்து வெள்ளையர்களின் நாடு. கிறிஸ்தவ மதமே பிரதானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும்,  இந்திய வம்சாவளி  ஒருவர், இந்து மதத்தை சேர்ந்தவர் அரச தலைவர் ஆகியுள்ளார். இங்கிலாந்து மக்கள் இனம், மதத்தை பார்க்கவில்லை. அவரின் திறமையை மட்டுமே பார்த்தனர். அபிவிருத்தி அடையும் நாட்டின் இயல்பு இது.

ஆனால் எமது நாட்டில் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.  இரட்டை குடியுரிமைக்கு அரசமைப்பு திருத்தம் ஊடாக தடைவிதிப்பதானது நாட்டை கல் யுகத்தை நோக்கி அழைத்துச்செல்வதாம். அதனால்தான் நாம் அதற்கு வாக்களிக்கவில்லை. இப்படியான அரசியலமைப்பு திருத்தங்களை செய்தவர்களுக்கு இங்கிலாந்து சம்பவம் சிறந்த அறையாகும்.

பஸில் ராஜபக்ச எமது நாட்டுக்கு வருவார். அவர் அரசியலில் ஈடுபடுவார். எம்.பி. பதவி முக்கயமில்லை. அதனால்தான் முன்கூட்டியே பதவி துறந்தார்.” – என்றார்.