மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஆட்சியை அமைப்பதற்கு இன்னுமொரு மக்கள் போராட்டம் அவசியமாகும். விரைவில் அவ்வாறானதொரு ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்படும். அந்த போராட்டத்தினை எவராலும் துப்பாக்கிகளாலும் , தடியடிகளாலும் , பயங்கரவாதத் தடைச்சட்டங்களினாலும் , வேறு வன்முறைகளாலும் நிறுத்தி விட முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கதிர்காமம் பிரதேசத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டைப் பாதுகாப்பதற்காக பஷில் ராஜபக்ஷ மீண்டும் வருவதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் குறிப்பிடுகின்றார்.

2015 இல் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷவை கைவிட்டுச் சென்றவரே தற்போது நாட்டை பாதுகாப்பதற்கு வருவதாகக் குறிப்பிடுகின்றனர்.

நாட்டை வங்குரோத்தடையச் செய்யும் சதித்திட்டத்தில் பிரதான சூத்திரிதாரி ஏழு மூளைகள் கொண்ட காகமாகும். சுபீட்சத்தின் நோக்கு எனக் கூறிக் கொண்டு வந்தவர்கள் , சிறிதளவேனும் சுபீட்சத்தை ஏற்படுத்தவில்லை. செழிப்பாகக் காணப்பட்ட நாட்டை, பிச்சையெடுக்கும் நாடாக மாற்றியுள்ளனர். வறுமையான நாடாகவே உலகம் இன்று இலங்கையை பார்க்கின்றது. யாரை மீண்டும் அழைத்து வந்தாலும் , மக்கள் அவர்களுக்கு சிறந்த பதிலை வழங்கவே காத்திருக்கின்றனர்.

தற்போது மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாகக் கூறுகின்றனர். இவ்வாறான தீர்மானங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தால் மக்கள் எவ்வாறு இந்நாட்டில் வாழப்போகின்றனர்? குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து கொண்டு, தமது தேவைக்கேற்ப மின் கட்டணத்தை அதிகரிக்கும் யுகத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைப்போம். மாறாக மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முயற்சித்தால் 220 இலட்சம் மக்களுடன் வீதிக்கு இறங்கி போராடுவோம்.

மக்களுக்கான அரசாங்கத்திற்காக நாம் போராடுவோம். நாட்டில் பணம் இல்லை என்பதால் , மக்களுக்கான சலுகைகள் எவையுமே இல்லை என்ற கோஷத்தை நாம் நீக்குவோம்.

அரச அதிகாரம் இல்லை என்றாலும் , மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கும் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என்பதை அனைவரும் அறிவார்கள். நாட்டில் பாரிய மாற்றமொன்று அவசியமாகும். இந்த மாற்றங்களை தலைகளை மாற்றுவதால் ஏற்படுத்த முடியாது. பாரிய போராட்டங்களை முன்னெடுத்து நாட்டை மோசமான நிலைமைக்கு கொண்டு சென்ற ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை மக்கள் பதவிகளிலிருந்து விலகச் செய்தனர்.

ஆனால் அதன் பிரதி பலனாக பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து , தம்மை பாதுகாப்பதற்காக காவலர் ஒருவரை ஜனாதிபதியாக நியமித்துள்ளனர். ஆர்ப்பாட்டங்களினால் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட்டனவா? இல்லை. மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஆட்சியை அமைப்பதற்கு இன்னுமொரு மக்கள் போராட்டம் அவசியமாகும். விரைவில் அவ்வாறானதொரு ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்படும்.

அந்த போராட்டத்தினை எவராலும் துப்பாக்கிகளாலும், தடியடிகளாலும் , பயங்கரவாதத் தடைச்சட்டங்களினாலும் , வேறு வன்முறைகளாலும் நிறுத்தி விட முடியாது. மக்களின் அரசாங்கத்தின் தோற்றத்துடனேயே இம்முறை ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வரும் என்றார்.