டி20 உலகக் கிண்ணத்தின் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 12 குழுக்கான போட்டியில் இலங்கை அணி இன்று களமிறங்கவுள்ளது.

பிரிஸ்பானில் நடைபெறும் இந்தப் போட்டி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். இலங்கை அணி இதுவரை சுப்பர் 12 சுற்றில் ஒரு போட்டியில் வென்று இரண்டில் தோற்ற நிலையில் குழு 1 புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்துடனான போட்டியில் தோற்ற ஆப்கான் அடுத்த இரண்டு போட்டிகளும் மழையால் கைவிடப்பட்ட நிலையில் புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசியாக ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேற ஏனைய போட்டிகளின் முடிவுகளும் தாக்கம் செலுத்துகின்றபோதும் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெறுவது கட்டாயமாகும்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கையின் மோசமான களத்தடுப்பு போட்டியின் முடிவில் பெரும் தாக்கம் செலுத்தியதோடும், துடுப்பாட்டமும் மோசமாக இருந்தது. ஆப்கான் அணி எதிரணிக்கு அதிர்ச்சி கொடுக்கக் கூடியது என்பதால் இந்தக் குறைகளை தவிர்ப்பது கட்டாயமாகும்.

இலங்கை அணி இன்றைய போட்டியில் மாற்றங்கள் இன்றி களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

பிரிஸ்பானில் இன்று மழை பொழிய அதிக வாய்ப்பு இருப்பதாக அவுஸ்திரேலிய காலநிலை அவதானிப்பு பணியகம் எதிர்வுகூறியுள்ளது. அவ்வாறான ஒரு நிலை போட்டியில் பெரும் பாதிப்பை செலுத்தக் கூடும்.

இன்றைய தினம் அவுஸ்திரேலிய நேரப்படி காலை வேளையில் மழை பெய்ய 90 வீத வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் போட்டி நடைபெறும் கெப்பா ஆடுகளம் பந்து மேலெழுவதோடு அதிக சுவிங் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டி இலங்கை நேரப்படி காலை 9.30க்கு ஆரம்பமாகும்