கேரளாவில் தலைமுடி, புருவ முடிகள் உதிர்ந்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முடி உதிர்விற்கான மருந்துகளை சாப்பிட்டும் அது கொட்டிய நிலையில் தனது தற்கொலைக்கு காரணம் சிகிச்சையளித்த மருத்துவர் தான் எனவும் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

கோழிக்கோட்டை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு கடந்த 2014ல் இருந்து சிகிச்சை எடுத்து வந்தார். மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் புருவம் மற்றும் மூக்கில் உள்ள முடிகளை இழந்தார்.

தலைமுடி உதிர்வு நின்றுவிடும் என்ற நம்பிக்கையில் பிரசாந்த் தொடர்ந்து மருந்துகளை உட்கொண்டார். ஆனால் தலைமுடி உதிர்வது நிற்காத நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மன வேதனையடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதியிருந்த கடிதத்தில், என்னால் வீட்டை விட்டே வெளியில் வர முடியவில்லை. தலைமுடி உதிர்வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தான் இறப்பிற்கு காரணம் என எழுதியிருந்தார்.

இதையடுத்து மருத்துவர் ரபிக் குறித்து பிரசாந்த் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்த நிலையில் அவர்களின் விசாரணை திருப்திகரமாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் முதன்மைக் குற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.