ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் எனவும், ஆனால் மூன்று முக்கிய நிபந்தனைகள் தங்களுக்கு இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போர் நீண்ட ஒன்பது மாதங்களாக நீடித்து வருகிறது. இருபக்கமும் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான பின்னடைவை சந்தித்துள்ள ரஷ்யா அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், அணு குண்டு வீச்சு தொடர்பிலும் மிரட்டி வருகிறது.

இது ஒருபக்கமிருக்க, போரை மேலும் நீட்டிக்க வேண்டாம் என உக்ரைனிடம் அமெரிக்கா தரப்பில் கடுமையான அழுத்தம் அளிக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை அளிப்பதுடன், நிதியுதவியும் முன்னெடுத்து வருகிறது அமெரிக்கா.

இந்த நிலையிலேயே ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. அதில், உக்ரைனின் எல்லைகளை மீட்டெடுக்க உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கு இடம்தர வேண்டும்,

ரஷ்ய தாக்குதல்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். குறித்த நிபந்தனைகளை தினசரி நாட்டு மக்களுக்கு அளிக்கும் காணொளி சந்திப்பில் ஜெலென்ஸ்கி விளக்கியுள்ளார்.

மட்டுமின்றி, பருநிலை உச்சிமாநாட்டில் உரையாற்றிய போதும், ஜெலென்ஸ்கி தமது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தலைவர்களுக்கு விடுத்த கோரிக்கையில், ரஷ்ய ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்தவும், தமது பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுக்கவும், ரஷ்யாவை உண்மையான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு கட்டாயப்படுத்தவும் ஜெலென்ஸ்கி கோரியுள்ளார்.

தொடர்ந்து இதே கருத்தையே முன்வைத்து வருவதாகவும், ஆனால் தங்களுக்கான பதில் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது என்று ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக செப்டம்பரில் ரஷ்யா அறிவித்த பின்னர், ஜனாதிபதியாக விளாடிமிர் புடின் ஆட்சியில் இருக்கும் மட்டும் அவருடன் பேச்சுவார்த்தைக்கு தாம் தயாரில்லை என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.

இதே கருத்தை உக்ரைன் அதிகாரிகள் தரப்பும் சமீப நாட்களாக உறுதி செய்து வந்துள்ளது. ரஷ்யாவின் வருங்கால ஜனாதிபதியுடன் மட்டுமே இனி பேச்சுவார்த்தை எனவும் உக்ரைன் கூறி வருகிறது.