அருவியில் செல்ஃபி எடுத்தபோது, கர்நாடக மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள அராபிக் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 40 மாணவிகள், கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லை அருகேயுள்ள கிட்வட் அருவிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர்.

பெலகாவி நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அருவி, கோல்காபூர் மாவட்டம் சந்கட் தாலுகாவில் உள்ளது. மாணவிகள் சிலரின் பெற்றோரும் உடன் சென்றிருந்தனர். அருவி நீரில் மாணவிகள் அனைவரும் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் 5 மாணவிகள் சற்று முன்னேறி, தண்ணீர் விழும் இடத்துக்கு அருகில் சென்று, செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் கால் இடறி, 15 அடி பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் விழுந்தனர்.

இவர்களது அலறல் சப்தம் கேட்டு, உள்ளூர் இளைஞர்கள் சிலர் தண்ணீரில் குதித்து, மாணவிகளை மீட்க முயன்றனர். அதற்குள் 4 மாணவிகள் தண்ணீரில் மூழ்கி விட்டனர். ஒருவர் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் 5 மாணவிகளும் மீட்கப்பட்டு, பெலகாவி மருத்துவ அறிவியல் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுயநினைவின்றி இருந்த ஒரு மாணவி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெலகாவி காவல் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) ரவீந்திர கடாடி கூறும்போது, “கிட்வட் அருவி மகாராஷ்டிரா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. அவர்களது அனுமதியுடன், உயிரிழந்த மாணவிகள் ஆசிய முஜாவர் (17), குத்ரஷியா ஹாசம் படேல் (20), ருக்கஷா பிஸ்தி (20), தஸ்மியா (20) ஆகிய 4 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இவர்கள் அனைவரும் பெலகாவி நகரைச் சேர்ந்தவர்கள்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக, கோல்காபூர் மாவட்டம் சந்த்கட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவியின் உறவினர் ஒருவர் அளித்த பேட்டியில், ”எனது மகளும் கிட்வட் அருவிக்கு சுற்றுலா சென்றிருந்தார். அவள் பாதுகாப்பாக இருக்கிறாள். ஆனால், அவளுடன் சென்ற எனது நெருங்கிய உறவுக்காரப் பெண், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார்” என அழுதபடி கூறினார்.