யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், வீதியில் சென்ற பெண்ணொருவரின் 3 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி , மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் , பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இளவாலை பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.
அதேவேளை , கொடிகாமம் பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட அல்லாரை பகுதியில் பெண்ணொருவரின் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் , பல கொள்ளை மற்றும் களவு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லை பகுதி மற்றும் அச்சுவேலி வைத்தியசாலை வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் வரும் வழிப்பறி கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்