இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதியளவில் யாழ்ப்பாணத்துக்கு வடக்காக இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்துக்கு அண்மையாக கரையை கடக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சில வேளைகளில் இது வட தமிழகப் பகுதியில் கரையை கடக்கும் வாய்ப்புக்களும் உள்ளன என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா. தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் ஏற்படும் காற்றால் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகும். எனினும் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளில் பரவலாக கன மழை முதல் மிகக்கன மழைக்கான வாய்ப்புள்ளது.

இந்த தீவிர தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மழை கிடைக்கும். மேற் கூறிய பகுதிகளில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திரட்டிய மழையாக 250 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே, வடக்கில் தற்போது கிடைத்து வரும் மழையினால் நிலம் நிரம்பிய நிலையில் காணப்படுகிறது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக மழை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அத்தோடு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு பகுதி கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

அதேவேளை மற்றுமொரு தாழமுக்கம் எதிர்வரும் 15 ஆம் திகதி அன்று அந்தமான் தீவுகளுக்கு அருகே உருவாகும் வாய்ப்புள்ளது. இதுவும் மேற்கு திசை நோக்கி வடக்கு மாகாணத்தினை அண்மித்தே நகரும் வாய்ப்புள்ளது.