கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட வறிய குடும்பங்களின் சுயதொழில் வாய்ப்புக்காக ஒரு ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசும் போது தெரிவித்தார். தலைவர் உட்பட 13 உறுப்பினர்கள் கலந்து கொண்ட அமர்வில் அவர் தொடர்ந்து பேசுகையில்,

கொட்டகலை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் அவர்களின் சுயதொழில் முயற்சிகளுக்காக காணியைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்துள்ளார்கள். அதற்கு அமைய, கொமர்ஷியல் பகுதியில் ஒரு ஏக்கர் காணியைப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகைகளில் கேள்விப் பத்திரம் கோரப்படவுள்ளது. காணியைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள், அதற்கான பணத்தை பிரதேச சபையில் வைப்பிலிட்டு, தாங்களாகவே கடைகளை நிர்மாணித்துக் கொள்ளலாம் அல்லது சபையின் ஊடாக கடைகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். இதில் எந்தவிதமான அரசியல் தொழிற்சங்க பேதமும் இருக்காது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து காணித் துண்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், எமது பிரதேச சபையின் ஊடாக ஐந்தாந் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் இலவச முன்னோடிப் பரீட்சை இம்மாதம் 19 ஆந் திகதி நடத்தப்படவுள்ளது. கொட்டகலை பிரதேசத்தில் உள்ள 28 தமிழ்ப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் பயன்பெறவுள்ளார்கள். அதேபோல், சிங்கள மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றும் 3 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் நடத்தப்படும். இதற்கான அனுசரணையை வழங்க முன்வந்துள்ளவர்கபாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்தோடு, எமது சபைக்கு வாகனம் ஒன்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவருக்கு சபையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.