நாட்டிலுள்ள 58 இலட்சம் குடும்பங்களில் 40 இலட்சம் குடும்பங்கள் வாழ்வதற்காக அரசாங்கத்தின் உதவியைக் கோரியுள்ளன. இது பாரதூரமான நிலைமையாகும். எனவே 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அது குறித்து விசேட அறிவிப்பொன்றை விடுத்து நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவ் அறிவிப்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இந்நாட்டின் 76 ஆவது வரவு – செலவு திட்டமாகும். நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் இந்த வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டங்களை விட இது சவால் மிக்கதாகவே காணப்படும். இவ்வாண்டில் எமது பொருளாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்டே இந்த வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.
பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்த ஒரு ஆண்டாகவே இவ்வாண்டு காணப்படுகிறது. 8.3 மறை பொருளாதார நிலைமையே காணப்படுகிறது. உணவு பணவீக்கம் 90 சதவீதமாகவும், பணவீக்கம் 70 சதவீதமாகவும் காணப்படுகின்றன.
வெளிநாட்டுக்கடன்களை தற்போது மீள செலுத்த முடியாது என்று நாம் அறிவித்திருக்கின்றோம். இவ்வாறான பொருளாதார பின்னணியிலேயே வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மறை 8.3 வீதமாகக் காணப்படும் பொருளாதாரம், அடுத்த ஆண்டு மறை 3 வரை வீழ்ச்சியடைக் கூடும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
அரச வருமானம் வரி அறவீட்டிலேயே தங்கியுள்ளது. மறை பெறுமானத்திற்குச் சென்றுள்ள பொருளாதாரத்தில் எவ்வாறு வருமானத்தைப் பெற்றுக் கொள்வது என்பதே தற்போது காணப்படும் பிரச்சினையாகும். அத்தோடு தற்போது வரவு மற்றும் செலவிற்கிடையில் காணப்படும் இடைவெளியை எவ்வாறு நிரப்புவது என்ற சிக்கலும் காணப்படுகிறது.
நாட்டில் காணப்படும் 58 இலட்சம் குடும்பங்களில் 40 இலட்சம் குடும்பங்கள் வாழ்வதற்காக அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்துள்ளன.
இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். இவை அனைத்தையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதே தற்போதுள்ள வரவு – செலவு திட்டத்தில் எதிர்கொண்டுள்ள சவால் ஆகும். எவ்வாறிருப்பினும் அடுத்த ஆண்டு இந்த சவால்களை வெற்றி கொண்டு எவ்வாறு பயணிப்பது என்பதே இலக்காகும்.
தற்போது வாழ்வதற்காக நாட்டிலுள்ள 70 சதவீதமான குடும்பங்கள் அரசாங்கத்திடம் உதவிகளைக் கோரியுள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை மக்களுக்கு சலுகைகளை வழங்கும் வகையில் தயாரிப்பது தொடர்பிலேயே அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வரவு – செலவுத் திட்டம் அமையும்.
புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிக்கையின் படி நபரொருவருக்கு மாதமொன்றுக்கு தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வாழ்வதற்கு 13 000 ரூபா தேவை என்று கணிப்பிட்டுள்ளது. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு மக்களை வாழ வைப்பதற்கான வருடமாக 2023 ஆம் ஆண்டை மாற்றியமைப்பதை இலக்காகக் கொண்டு குறித்த வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
இணைந்திருங்கள்