இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதுடன் நேற்று மதியம் இரண்டு மணியில் இருந்து போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகளின் வாக்குறுதிக்கமைய குறித்த போராட்டம் கைவிடப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

யாழ்ப்பாண சாலை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் திங்கட்கிழமை திடீர் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபை யாழ் சாலை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவாக வடக்கு மாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளும் ஒன்றிணைந்து நேற்று பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.