உத்தேச தேர்தல் முறைமை தொடர்பில் நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்வது குறித்துத் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக இந்தக் குழுவில் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், இது தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர்களின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்வது பொருத்தமானது என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. அதற்கமைய நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்று எதிர்வரும் ஏப்ரல் 07 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த விசேட குழுவில் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார, விமல் வீரவன்ச, ரவுப் ஹக்கீம், கபீர் ஹஷீம், எம்.ஏ. சுமந்திரன், மனோ கணேஷன், கௌரவ மதுர விதானகே மற்றும் இந்த விசேட குழுவின் செயலாளர் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.