மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி நதிக்கரையில் நடந்த துாய்மைப் பணியின் போது, முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஐந்து பீரங்கிகள், இந்திய கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டன.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் ஹூக்ளி நதியை சுத்தம் செய்யும் பணியில் இந்திய கடற்படையினர் சமீபத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நதிக்கரையில் மண்ணுக்கடியில் புதைந்திருந்த ஐந்து பழங்கால பீரங்கிகள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து இந்திய கடற்படை அதிகாரி ஜாய்தீப் சக்கரவர்த்தி கூறியதாவது: கடற்படை வீரர்கள் ஹூக்ளி நதிக்கரையில் குப்பையை அகற்றி சுத்தம் செய்து வந்தனர். அப்போது, பூமிக்கடியில் வித்தியாசமான சத்தம் கேட்டது. அந்த இடத்தை தோண்டிப் பார்த்ததில் பழங்கால பீரங்கி ஒன்று தென்பட்டது.

தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில், மேலும் நான்கு பீரங்கிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் முதலாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என தெரிகிறது. பீரங்கிகளின் தயாரிப்பு குறித்து எந்த குறியீடும் இல்லாததால், இவற்றின் காலத்தைக் கண்டறிவதில் சிக்கல் நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.