கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சிறார் மருத்துவமனையில் திடீரென்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவு அல்லது எதிர்பாராத இறப்பு எண்ணிக்கை ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதுண்டு. ஆனால் தற்போது, பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிறார்கள் மருத்துவமனையில் சனிக்கிழமை பகல் சுமார் 6.35 மணியளவில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு 7.03 மணிக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் ஆரஞ்சு எச்சரிக்கை ஏன் செயல்படுத்தப்பட்டது என்பதற்கான எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை, மட்டுமின்றி மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் நிலைமை குறித்த வேறு எந்த விவரங்களையும் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஆனால் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் கனடா முழுவதும் சுவாச நோயின் பாதிப்புடன் அதிக நோயாளிகள் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர் என்றே தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிறார் மருத்துவமனை ஒன்று, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை அறிந்து சிறப்பு ஏற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தது.

பொதுவாக ஒரு நாளில் 72 சிறார்களை பரிசோதிக்கும் வசதியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 250 பேர்கள் வரையில் சிகிச்சை நாடியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா போன்று ஆல்பர்ட்டா பகுதியிலும் இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, புதிய பாக்டீரியா பாதிப்பால் பிரித்தானியாவில் இதுவரை 7 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.