பிரித்தானிய ராஜகுடும்பத்தை மொத்தமாக உலுக்கிய ஓப்ரா வின்ஃப்ரே நேர்காணலுக்கு முன்னர், பிரித்தானிய மக்களுக்கு எதிராக இளவரசர் ஹரி கோபத்தில் கொந்தளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்வலைகளை ஏற்படுத்திய ஓப்ரா வின்ஃப்ரே நேர்காணலுக்கு முன்னர், நண்பர் ஒருவரை தொடர்புகொண்ட ஹரி, அந்த நேர்காணல் உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, அந்த பிரித்தானிய மக்களுக்கு பாடம் புகட்டவேண்டிய தருணம் இதுவெனவும் ஹரி தெரிவித்துள்ளார். ஹரி- மேகன் தம்பதி கலந்துகொண்ட ஓப்ரா வின்ஃப்ரே நேர்காணலில், ராஜகுடும்பத்தினர் இனவாதிகள் எனவும், தற்கொலை செய்துகொள்ளும் மன நிலைக்கு தள்ளப்பட்ட மேகனுக்கு உதவ அரண்மனை தயாராகவில்லை எனவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

ஆனால், நீண்ட பத்தாண்டு காலம் ராணுவத்தில் பணியாற்றிய, பிரித்தானிய மக்கள் மீது ஒருபோதும் பழி சொல் பேசாத ஒருவரை, நாட்டுக்கு எதிராக திருப்பி விடுவது என்பது வெட்கக்கேடானது என செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஓப்ரா வின்ஃப்ரே நேர்காணலுக்கு பின்னர் தற்போது ஆவணப்படம் ஒன்றை வெளியிட தயாராகிவரும் ஹரி- மேகன் தம்பதி தொடர்பில் கவனமாக இருக்க அரண்மனை நிர்வாகம் ராஜகுடும்பத்தினருக்கு அறிவுறுத்தியுள்ள நிலையிலேயே, பிரித்தானிய மக்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என இளவரசர் ஹரி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜகுடும்பத்தினர் கற்பனை செய்வதைவிடமும் மிக மோசமான அதிர்வலைகளை இந்த ஆவணப்படம் ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. மூடிய அறைகளுக்குள் என்ன நடக்கிறது என்பது எவரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எனது குடும்பத்தை காக்க, தன்னால் இயன்ற அனைத்தையும் தான் முன்னெடுப்பேன் என இந்த ஆவணப்படம் தொடர்பாக இளவரசர் ஹரி கூறியுள்ளார்.

இதனிடையே, மன்னர் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் ஆகியோர் அவசர ஆலோசனை சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.