திருமண உறவைத் தாண்டி உடலுறவு வைத்துக்கொண்டால் ஒரு வருடம் வரை சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யும் புதிய குற்றவியல் சட்டம் இந்தோனேஷியா பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த சட்ட வரைவைத் தயாரிப்பதில் பங்குபெற்ற அரசியல்வாதியான பாம்பாங் வுரியாண்டோ, இந்தச் சட்டம் அடுத்த வாரத்தில் நிறைவேற்றப்படலாம் என்றார்.

இந்தச் சட்டம் இந்தோனேஷியா குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும்.

இந்தச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.

திருமணமானவர்கள் இந்தச் சட்டத்தை மீறினால் அவரது கணவன் அல்லது மனைவிக்கு புகார் அளிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.

அதேபோல, திருமணமாகாதவர்கள் உடலுறவு வைத்துக்கொண்டால் அது குறித்து புகாரளிக்கும் உரிமையை அவர்களின் பெற்றோருக்கு இந்தச் சட்டம் வழங்குகிறது.

மேலும், திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்வதும் தடைசெய்யப்பட உள்ளது. மீறுபவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.