ஶ்ரீலங்கா  சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த உள்ளக மோதல் தற்போது சந்திவரை வந்து, குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றது. அரசுக்கு ஆதரவளிப்பவர்களும், கட்சியில் இருப்பவர்களும்  கடும் சொற்போரில் ஈடுபட்டுவருவதால் ‘அரசியல் போர்’ உக்கிரமடைந்துள்ளது.

இவ்வாறானதொரு  பின்புலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் (வெற்றிலை சின்னம்) பொதுச்செயலாளர் பதவியில் மைத்திரிபால சிறிசேன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். கூட்டணியின் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீரவை நீக்கிவிட்டு, அந்த இடத்துக்கு திலங்க சுமதிபாலவை நியமித்துள்ளார். இவ்விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

தனது இந்த முடிவை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தை கடந்த 30 ஆம் திகதி மைத்திரி அவசரமாக கூட்டியிருந்தார். எனினும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈபிடிபி, தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை.

இதற்கிடையில்  கட்சி பொதுச்செயலாளரின் அனுமதியின்றி கூட்டப்பட்ட இந்த கூட்டம் சட்டவிரோதமானது என மஹிந்த அமரவீரவும் விசேட அறிவிப்பை விடுத்தார். கூட்டணியின் தலைவர் என்ற வகையில் கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் தனக்கு இருப்பதாக மைத்திரி பதிலடி கொடுத்திருந்தார். இன்னும் மோதல் ஓயவில்லை. இவ்விவகாரம் விரைவில் நீதிமன்றம்வரை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அரசுக்கு ஆதரவு வழங்கும் சுதந்திரக்கட்சி எம்.பிக்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினர். எனவே, இவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையக்கூடும் அல்லது கூட்டணி அமைக்ககூடும் என தகவல்கள் பரவின.  எனினும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாமல், எதிர்காலத்தில் கூட்டணியாக செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.