சீனாவும் இந்தியாவும் தங்களின் கடன்களை மறுசீரமைக்க உடன்படவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
பிபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பில்லியன் கணக்கான டொலர் கடனை குறைக்க சீனாவும் இந்தியாவும் முதலில் ஒப்புக் கொள்ளும் வரை சர்வதேச நாணய நிதியம் பணத்தை வழங்காது.
எனவே அனைத்துத் தரப்பினரும் விரைவாகச் செயல்படுவது சிறந்தது என்று மத்திய வங்கியின் ஆளுநர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்
இது, அந்த நாடுகளின் கடன்களை இலங்கை திருப்பிச் செலுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கடமைகளை நிறைவேற்றாமல், நீண்ட காலத்திற்கு இவ்வாறான நிலையில் இருக்க இலங்கையும் விரும்பவில்லை.
அது நாட்டுக்கும் மக்களுக்கு நல்லதல்ல.
அத்துடன் இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு நல்லதல்ல என்று மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குபவராக இருக்கும் சீனாவுக்கு இந்த விடயத்தில் அதிக பொறுப்பு உள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தாமதிக்க நேரம் இல்லை என்பதால், சீனாவும் தாமதிக்காது என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இதனால் சீனாவுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவும் சீனாவும் இறுதியில் இலங்கைக்கான தங்கள் கடன்களை மறுசீரமைக்க ஒப்புக்கொண்டால், நாட்டின் வெளிநாட்டுக் கடன் பங்குகளில் 40 சதவீதப் பங்கு வகிக்கும் தனியார் கடனாளிகளிடம் இருந்து சிக்கல் உருவாகும் என்று பிபிசி குறிப்பிட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டில் ஆர்ஜென்டினா பொருளாதார நெருக்கடியில் மூழ்கிய பின்னர், சில அமெரிக்க ஹெட்ஜ் நிதிகள், திறந்த சந்தையில் தாங்கள் பெற்ற இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பதை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, முழுத் திருப்பிச் செலுத்துமாறு கோரி அந்த நாட்டு அரசாங்கத்தை அமெரிக்க நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றன என்பதை பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில் இந்தியா, சீனா உட்பட்ட இருதரப்பு கடன்கொடுனர் இணங்கினால், இன்னும் 6 வாரக்காலப்பகுதியில் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டமுடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்