அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் பறிக்கப்பட்ட அதிகாரங்களில் நிர்வாக ரீதியாக மீளத்தரக்கூடிய அதிகாரங்களை முதலில் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவாதம் அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றத்தில் மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி அதற்கு முழுமையாக ஆதரவளிக்கும் எனவும், அரசாங்க தரப்பினரின் ஆதரவை தான் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி முன்னெடுப்பதற்கு கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு அப்பால் ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலின்போது அவர் வழங்கிய ஏனைய உத்தரவாதங்கள், அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு, அரசியல் தீர்வு விடயத்தில் சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வழங்கியிருக்கும் உத்தரவாதங்கள் குறித்த திருப்தி நிலை, தற்போதைய பாராளுமன்றத்தில் மாகாண சபைத் தேர்தல் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடு என்பன தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் பறிக்கப்பட்ட சில அதிகாரங்களை மீண்டும் வழங்குவதெனில், அதனை நிர்வாக ரீதியாக செய்யமுடியும். அதற்கமைய கல்வி அதிகாரங்கள் அனைத்தையும் மாகாண சபையிடமே வழங்குவதாக ஜனாதிபதி உத்தரவாதம் அளித்தார்.

இருப்பினும் சட்ட ரீதியாக பறிக்கப்பட்ட சில அதிகாரங்களை அச்சட்டங்களைத் திருத்துவதன் ஊடாக அல்லது அவற்றை நீக்குவதன் ஊடாகவே மீளப்பெற முடியும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும். எனவே தற்போது நிர்வாக ரீதியாக வழங்கக்கூடிய அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி கூறுகிறார்.

அரசியல் தீர்வினை பொறுத்தமட்டில் அரசியலமைப்பில் இருப்பதை நடைமுறைப்படுத்தல் மற்றும் கடந்த காலங்களில் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள வழங்கல் போன்ற உத்தரவாதங்களையே ஜனாதிபதி வழங்கியிருக்கிறார். மாறாக, அதில் புதிதாக எதனையும் கூறவில்லை.

அதேவேளை அரசியல் தீர்வு விவகாரத்தில் ஏற்கனவே கூறியவற்றை விட முன்னேற்றகரமான விடயங்களை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குவதாக சஜித் பிரேமதாஸ கூறியிருக்கிறார். அதேபோன்று அநுரகுமார திஸாநாயக்க புதிய அரசியலமைப்பிலேயே தீர்வு எனக் கூறுவதால், அதில் போதிய தெளிவில்லாமல் இருக்கிறது.

எனவே புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு வழங்கல் செயன்முறை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது பற்றி எமக்குத் தெளிவாக விளக்கமளிக்கப்பட வேண்டும் என நான் அவரிடம் வலியுறுத்தியிருக்கிறேன். இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதனையும் கூறவில்லை.

அடுத்ததாக பாராளுமன்றத்தில் மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி அதற்கு முழுமையாக ஆதரவளிக்கும். அதேபோன்று அரசாங்க தரப்பினரின் ஆதரவைத் தான் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி கூறுகிறார். எனவே இச்சட்டமூலம் நிறைவேற்றப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றார்.