யினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யாழ். நகர நீர் குழாய் அமைப்பு, மற்றும் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளை 06.10.2021 அன்று முற்பகல் ஆரம்பித்து வைத்தார்.

நயினாதீவில் இடம்பெற்ற நிகழ்வில் கௌரவ பிரதமர் அலரி மாளிகையில் இருந்து நேரடியாக மெய்நிகர் (Zoom) தொழில்நுட்பம் மூலம் கலந்து கொண்டு, தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப் பணிகள், மற்றும் யாழ் நகர நீர் வழங்கலுக்கான நீர் குழாய் அமைக்கும் நடவடிக்கை என்பவற்றை தொடக்கி வைத்தார்.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக – 186 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பாதுகாப்பான குழாய் நீரை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதுடன், மத்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இத்திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக உயர் தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த திட்டம் மற்றும் யாழ் நகர நீர் வழங்கல் திட்டத்தின் பாதுகாப்பான நீர் குழாய்களை பொருத்துவதன் மூலம் – சுமார் மூன்று இலட்சம் மக்கள் நன்மையடைவதுடன்,
அத்திட்டங்களை 2023ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் அதனை அண்மித்து வாழும் சுமார் பன்னிரெண்டு இலட்சம் மக்களுக்கு – குழாய் மூலமான பாதுகாப்பான நீரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பது சிறப்பான அம்சமாகும்.

மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளுக்கான நீர் விநியோகம் முறைப்படுத்தப்படுவதுடன், இதன் மூலம் சுமார் 5000 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைவர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தென்னாசிய பணிப்பாளர் நாயகம் கென்ச்சி யொகுஹாமா அவர்கள் மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு இந்த திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

நயினாதீவு விகாராதிபதி வணக்கத்திற்குரிய நவந்தகல பபுமகித்திதிஸ்ஸ தேரர், நயினாதீவு அம்மன் ஆலய பிரதான குருக்கள் சாமதேவ குருக்கள் உள்ளிட்ட சமய தலைவர்கள் மற்றும் யாழ்ப்பாண மக்கள் – மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக – கௌரவ பிரதமருக்கும், எனக்கும், எமது அரசாங்கத்திற்கும் – இந்த திட்டம் ஊடாக தமக்கு கிடைக்கவிருக்கும் நன்மைக்காகத் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.

வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் 9.6 சதவீதமான பாதுகாப்பான நீர் குழாய் அமைப்பை, 2025ஆம் ஆண்டளவில் 56.9 சதவீதமாக உயர்த்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளது.

நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணாயக்கார அவர்கள் இந்த நிகழ்வில் உரையாற்றும் போது –
“எவரையும் தோற்கடிப்பது அன்றி, யுத்தத்தை நிறைவு செய்வதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் அன்றைய எதிர்பார்ப்பாக காணப்பட்டது. எவ்வளவு செலவானாலும் யுத்தத்தினால் இழந்த தேவைகளை அந்த மக்களுக்குப் பெற்றுக்கொடுக்குமாறு கௌரவ பிரதமர் அவர்கள் எமக்கு தொடர்ந்து அறிவுறுத்தினார்.

அதிகம் செலவாகும் என அமைச்சரவையில் நாம் குறிப்பிட்ட போது, எவ்வளவு செலவானாலும் இந்த நீர் வழங்கல் திட்டத்தை நாம் அமைக்க வேண்டும் என கௌரவ பிரதமர் அவர்கள் கூறினார்.
இவை அனைத்தும் வடக்கு மக்களுக்காகவே ஆகும். இந்த பாய்ந்தோடும் நீருடன் கௌரவ பிரதமரின் இதயத்தின் கருணையும், நல்லிணக்கமும் பாய்ந்தோடுகிறது என்றுதான் கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்து, நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் திரு.நிசாந்த ரணதுங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் அலரி மாளிகையில் இருந்து மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவில் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் பீ. எஸ். எம். சார்ள்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.