முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை(Sheikh Hasina) வங்கதேசத்துக்கு(bangladesh) நாடு கடத்தலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை இந்திய அரசுக்கு உள்ளது என்றும், ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்த இடைக்கால அரசு இந்தியாவைக் கோரலாம் என்றும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை ஆலோசகர் எம்.டி. தவ்ஹித் ஹொசைன் தெரிவித்தார்.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு அழைத்து வர இந்தியாவிடம் கோரிக்கை வைக்க இடைக்கால அரசு நிச்சயம் தயாராக உள்ளது என்றார்.
சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை
ஷேக் ஹசீனாவை பங்களாதேஷுக்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று ஹொசைன் கூறினார்.
இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதாகவும், அதற்கான சட்ட நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் குறிப்பிட்டார்.
பங்களாதேஷ் போராட்டத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
போராட்டத்தை பெரிதுபடுத்திய இந்திய ஊடகங்கள்
ஆனால், வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தை இந்திய ஊடகங்கள் பெரிதுபடுத்தியதாகவும், மேற்கத்திய ஊடகங்கள் அத்தகைய முறையை பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
பங்களாதேஷில் ஏற்பட்ட போராட்டத்தை அடுத்து அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவிற்கு தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்