பதிவாளர் நாயகம், அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு அரசாங்கம் 33 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதிவாளர் நாயகம் தொடர்பான பதவி உயர்வு தேர்வை காலவரையின்றி ஒத்திவைத்ததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரச அதிகாரிகள் உரிய நேரத்தில் தீர்மானங்களை எடுக்கத் தவறியமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும், இது பொதுச் சேவையின் செயல்திறனைக் குறைக்க வழிவகுக்கும் எனவும் நீதிபதிகளான காமினி அமரசேகர மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா அறிவித்துள்ள தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்கத்தின் அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி. எம். எஸ். திசாநாயக்க உள்ளிட்ட 132 எழுத்து உதவியாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் தீர்ப்பை அறிவிக்கும் போதே நீதிபதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

2005 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் பதிவுத்துறை உதவியாளர் தரம் III இல் தாங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு, 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் திகதி எழுத்தாளர் உதவியாளர்களின் பதவி உயர்விற்கான பரீட்சை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், பின்னர் அப்பரீட்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாகவும் இதனூடாக பதிவாளர் நாயகம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் உரிய விசாரணை நடத்தாமல், குறித்த பரீட்சையை காலவரையின்றி ஒத்திவைக்க, பதிவாளர் நாயகம் எடுத்த முடிவு தன்னிச்சையானது, சட்டத்துக்கு எதிரானது என நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

பதிவாளர் நாயகம் மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும், அதற்காக ஒவ்வொரு மனுதாரருக்கும் தலா ரூ.25,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.