காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளாமல் காலம் கழிந்த பின்னர் கைசேதப்படுவது எமது முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலரில் காணப்படும் பலவீனம். அதற்காக அவர்கள் காற்றுள்ளபோது தூற்றிக் கொள்வதில்லை என்று ஒட்டுமொத்தமாக கூற வரவில்லை. மாறாக, காற்றுள்ளபோது தங்களை மட்டும் துடைத்துக் கொள்வார்கள் என்பது எனது அறிவியல், அரசியல்சார் புரிதல். ஆனால் இவ்வாறான சந்தர்ப்பத்தில சமூக அக்கறை என்பது அவர்களிடம் சதத்துக்குமே இல்லாமல் போய்விடுகிறது. இதற்கு நல்லதொரு உதாரணம் சம்மாந்துறை உப பஸ் டிப்போ படும் அவஸ்தையைக் கொள்ளலாம்.

நாடு முழுவதும் உள்ள உப டிப்போக்களை பஸ் தரிப்பிடமாக மாத்திரம் பயன்படுத்தவும் அது தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் பிரதான டிப்போ மூலம் முன்னெடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இங்கே சம்மாந்துறை உப பஸ் டிப்போ என்ற விவகாரமும் உள்ளடங்குகிறது.

சம்மாந்துறை உப பஸ் டிப்போவை எப்போதோ தரமுயர்த்தி சேவைகளை விஸ்தரித்திருந்தால் இன்று இந்த நிலைமை எழுந்திருக்குமா? அதற்கான சந்தர்ப்பங்கள் கடந்த காலத்தில் நிறையவே காணப்பட்டது. அப்போது நமது முஸ்லிம் அரசியல்வாதிகளின் கண்களுக்கு சம்மாந்துறை உப பஸ் டிப்போ காணாமல்போனது விசித்திரம்தான்.

சம்மாந்துறை உப பஸ் டிப்போ இடமாற்ற விடயத்தில் திகாமடுல்ல நாடாளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்எம்எம் ஹாரிஸ், பைசல் காசிம், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஆகியோர் இலங்கைப் போக்குவரத்துச் சபை தலைவரைச் சந்தித்தனர். இது தொடர்பில் பேசினர். எல்லாம் சரி என அறிக்கை வந்தது.

ஆனால், அனைத்தும் பிழையானதால்தானே போக்குவரத்து துறைசார் அமைச்சரை சந்தித்துப் பேசினர். அதற்கும் அறிக்கை வந்தது. ‘ஆகி விட்டது அனைத்தும் சரியாக’ என்ற தோரணையில்தான் அந்த அறிக்கையும். ஆனால் அங்கும் ஒன்றும் நடக்கவில்லை.
ஓடினார்கள்… ஓடினார்கள்… ஒரு வழியாக பிடித்தார்கள் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவை (பிரதமரின் சார்பில்) ஆனால், அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவோ, துறைசார் அமைச்சர், அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு செல்வதாக பிடிகொடாமல் தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்பும் திடீரென இந்த விடயத்தில் விழித்துக் கொண்டு சில முன்னெடுப்புகளை மேற்கொண்டபோதும் அவையும் கையறு நிலையில்தான் காணப்படுவதாக தகவல்கள்.

நாடு பூராகவும் உள்ள உப டிப்போக்களை பஸ் தரிப்பிடமாக மாத்திரம் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், சம்மாந்துறை உப பஸ் டிப்போவுக்கு மட்டும் அரசின் இந்தக் கொள்கை விதி விலக்காக அமையுமா என்பது கேள்விக்குறியான விடயமே. ஆனால் கைகூடினால் அது பாரிய வெற்றியாகும்.
இது இவ்வாறிருக்க, உண்மையான இஸ்லாமிய உணர்வுள்ள எவரும் சம்மாந்துறையை மறந்து விட முடியாது

சுனாமியால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முன்வந்த ஊர், கொரோனாவால் உயிரிழப்போரின் ஜனாஸாக்களையும் அடக்கம் செய்ய அன்போடு மனமுவந்த மண் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. இப்படி பல்வேறு தனித்துவமான உயர்குல பண்புகளைக் கொண்ட மக்கள் வாழும் மண்.
ஆனால், இந்தப் பிரதேசத்துக்கான அபிவிருத்திகள் என்பது ஏதோ ஒரு வழியில் பின்னோக்கியே காணப்படுகிறது என நான் நம்புகிறேன். ஆகக் குறைந்தது அந்த மக்களின் அபிவிருத்தி ரீதியான அபிலாஷைகள் கூட ஏக்கத்துடன் பார்க்க வேண்டிய விடயமாகவே உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் எத்தனை முஸ்லிம் எம்பிக்கள் இருந்தாலும் சம்மாந்துறை என்று வரும்போது சற்றுத் தூரமாகப் பார்க்கும் போக்கையே நான் அவதானிக்கிறேன். எவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் எனக்குப் பரவாயில்லை. ஆனால் சம்மாந்துறையை புறம்போக்கு நிலமாக கருத எவரையும் அனுமதிக்க முடியாது.

அந்த மக்கள் இன்று தங்களுக்கான அரசியல் அதிகாரத்தை இழந்துள்ள நிலையில், மாற்றான் தோட்டத்து மல்லிகைதானே என்ற மனப்போக்குடன் அரசியல்வாதிகள் செயற்படக் கூடாது. அவர்களின் உணர்வுகளைப் புரிந்து செயற்பட வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் இன்றுள்ள முஸ்லிம் எம்பிக்களில் எவரேனும் ஒருவர் சம்மாந்துறையானின் ஒரு வாக்கையும் தான் பெறாது தேர்தலில் வென்றேன் என்று முடிந்தால் துணிந்து கூறட்டும். அவன் தலையில் இடி விழட்டும்.

ஒரு வகையில் இன்று தங்களை மற்றவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ள அந்த மக்களை ‘தர்மம் தாருங்கள்’ என கையேந்தும் நிலைக்கு எந்த அரசியல்வாதிகளும் இட்டுச் செல்லக் கூடாது. அரசியல் சதுரங்க ஆடு களமாக சம்மாந்துறையை பயன்படுத்த வேண்டாம்.

அந்த மக்களின் காணிப் பிரச்சினைகளும் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளதாக நினைக்கிறேன்.

எனவே, சம்மாந்துறை விடயத்தில் அந்த மாவட்ட முஸ்லிம் எம்பிக்கள் தங்களால் முடிந்தவற்றை செய்து கொடுக்க வேண்டும்.

அந்த மக்களை நீங்கள் பிச்சைப் பாத்திரம் ஏந்த வைத்தீர்கள் என்றால் அதன் அறுவடையானது அடுத்த தேர்தலில் நீங்கள் கோவணமும் இல்லாமல் செல்லும் நிலைக்கு கொண்டு சென்று விடும் என்பது மட்டும் நிச்சயம்.


-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்