✍️ அஸ்ஹர் ஆதம்
ஜித்தாவிலுள்ள சுப்பர் டோம் அரங்கில் மக்கா அல்-முகர்ரமாவின் பிரதி அமீர் இம்மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.
இரு புனிதத் தலங்களின் சேவகரும் மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-சஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-சஊத் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் பேரில் நடைபெறும் இம்மாடு மற்றும் கண்காட்சியை மக்கா அல்-முகர்ரமா பிராந்திய பிரதி அமீர் இளவரசர் ஸஊத் பின் மிஷ்அல் பின் அப்துல் அஸீஸ ஆரம்பித்து வைத்தார்.
மக்காவிலிருந்து உலகிற்கு எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு நடை பெறுகின்றது.
விஷன் 2030 திட்டத்தின் கீழ் செயற்படும் இறை விருந்தினர்களுக்கான சேவைத் திட்டத்தின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் இடம்பெறும் இந்நிகழ்வில் சஊதி அரேபியாவின் இளவரசர்கள் அமைச்சர்கள், சர்வதேச ஹஜ் கமிட்டிக்கள் மற்றும் அமைப்புக்களின் தலைவர்கள், சர்வதேச இஸ்லாமிய நாடுகளின் ஹஜ் விவகார அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
கண்காட்சியைப் பார்வையிட்ட மக்கா பிராந்திய பிரதி அமீர், இறை விருந்தினர்களுக்கு சேவை செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்கள், தொழிநுட்ப உதவிகள் மற்றும் நவீன தீர்வுகள் குறித்து கேட்டறிந்ததோடு, அரசு மற்றும் தனியார் துறையினர்களின் சேவைகளையும் பார்வையிட்டார்.
இரு புனிதத் தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் சார்பில் உரையாற்றிய பிரதி அமீர், வருகை தந்த விருந்தினர்களை வரவேற்றார். சஊதி அரேபியா இரு புனிதத் தலங்களுக்கும் இறை விருந்தினர்களுக்கும் சேவை செய்வதை தனது முதன்மைப் பொறுப்பாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. புனித ஹஜ் சேவைகளின் தரத்தை உயர்த்துதல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை அதிகரித்தல் மூலம் ஹாஜிகள் தங்களது நாடுகளிலிருந்து புறப்பட்டது முதல் பாதுகாப்பாகத் திரும்பும் வரையிலான பயணத்தை இலகுவாக்குவதே எமது நோக்கமாகும்,” என மன்னரின் உரையை மேற்கோள் காட்டி தெரிவித்தார்.
ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்பீக் பின் பவ்ஸான் அல்-ரபீஆ தனது உரையில், ஹஜ் சேவைத்துறையில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்களை விபரித்தார். வெளிநாடுகளிலிருந்து வரும். ஹாஜிகளுக்கு சேவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையை 34 ஆக உயர்த்தியமை, 58 நாடுகளுடன் நேரடி ஒப்பந்தங்களை ஏற்படுத்தியமை, 75 மேலதிக நாடுகளுக்கு நேரடி ஹஜ் திட்டத்தை விரிவுபடுத்தியமை, 78 நாடுகளின் ஹஜ் விவகார அலுவலகங்களுடன் 1448ஆம் ஆண்டுக்கான ஹஜ் காலத்திற்கு முன்னாயத்தங்களை மேற்கொண்டமை போன்றவற்றை இவர் சுட்டிக்காட்டினார். மேலும், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ‘நுசுக்’ செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 70 மில்லியனைக் கடந்துள்ளதாகவும், கடந்த 1447ஆம் ஆண்டு ஹாஜிகளின் திருப்தி நிலை 93 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாகவும் இவர் குறிப்பிட்டார்.
நேற்றைய ஆரம்ப நிகழ்வில் இந்தோனேசியக் குடியரசின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் முஹம்மத் இர்பான் யூசுப் சர்வதேச ஹஜ் விவகார அலுவலகங்களின் சார்பில் உரையாற்றினார். அத்துடன் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக் களம், ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த நுழைவாயில் என்பனவும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வின் போது 8 முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்தாகின. கல்வி மற்றும் சுற்றுலா அமைச்சுகளுடனான ஒப்பந்தங்கள், சஊதி எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் மக்கா அல்-முகர்ரமாவில் ஹாஜிகளுக்கான பயண முனையத்தை உருவாக்குதல் மற்றும் இயக்கும் ஒப்பந்தம், மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்துடனான ஆராய்ச்சி ஒப்பந்தங்கள் என்பன இதில் அடங்கும். அத்துடன், அல்-மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலுக்குச் செல்லும் பாதைகள் மற்றும் நிலையங்களை மேம்படுத்துவதற்காக 5.6 பில்லியன் ரியால் பெறுமதியான “வாஸில் அல்-ஹரம்” திட்ட ஒப்பந்தமும் கையெழுத்தானது.
நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இம்மாநாடு மற்றும் கண்காட்சியில் சஊதி அரேபியா சர்வதேச அளவிலான 520க்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளதுடன், 150க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்