அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ஒருபோதும் பறிக்க முடியாது என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம், தெரிவித்துள்ளார்முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே கொழும்பு துறைமுக நகர் சட்டமூலத்திற்கு ஆதரவளித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.’
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு’ சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் கட்சியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு நீக்கப்பட்டுள்ளனர் என அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் என்.எம்.சஹீட் தெரிவித்தார்.இது தொடர்பில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,”அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் பிரகாரம் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் வேட்பளராக களமிறங்கி நான் பாராளுமன்றம் சென்றுள்ளேன்.இதன் காரணமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் எனது எம்.பி பதவியினை பறிக்கவும் முடியாது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவும் முடியாது.
எமது கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேரடியாக அழைத்து இந்த சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு கூறினார்.அது போன்று கட்சியின் பொதுச் செயலாளரும் இந்த சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். எனினும் இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பேன் என கட்சி தலைவரான றிசாத் பதியுதீனிடம் நான் நேரடியாக கூறிவிட்டேன்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளும் அரசியலை புத்தளத்தில் மேற்கொள்ள முடியாது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இழந்திருந்த பாராளுமன்ற உறுப்பினரினை புத்தளம் மாவட்டம் பெற்றுள்ளது.இதனால் பெருமான்மை சமூகத்துடன் இணைந்தே இந்த மாவட்டத்தில் செயற்பட முடியும். இதற்கமையவே எனது அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த சட்டத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்து நான் செயற்படுகின்றேன். இதன் காரணமாக புத்தளம் மாவட்ட முஸ்லிம்களுக்கு பாரிய நன்மைகள் கிடைக்கும்.கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்தினை நான் ஆதரித்தமைக்கு பல காரணங்கள் உள்ளன.
அதில் குறிப்பாக நாட்டை முன்னோக்கிய அபிவிருத்தி செய்ய வேண்டும். இதற்கு இந்த துறைமுக நகர் அத்தியவாசியமாக உள்ளது என்ற அடிப்படையில் இதற்கு ஆதரளித்தேன்என்னை கட்சியிலிருந்து இடைநிறுத்தயமை தொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
இணைந்திருங்கள்