ஆதி வள்ளியப்பன்
“நம் வீடு தீப்பற்றி எரியும்போது என்ன செய்வோம்? அதையே இப்போதும் செய்ய வேண்டும். ஏனென்றால், நம் தாய்மண்ணான பூவுலகு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது’’ – உலகப் பொருளாதார மன்றத்தில் பருவநிலை மாற்றச் செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் மூன்றாண்டுகளுக்கு முன் இப்படிப் பேசியபோது யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
இப்போது பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் (IPCC – ஐ.பி.சி.சி.) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை – ‘பருவநிலை மாற்றம் 2021: இயற்பியல் அறிவியல் ஆதாரங்கள்’, அந்த எச்சரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உலகின் தலைக்கு மேல் நிஜமாகவே கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது என்கிற இந்தச் செய்தி, அநேகமாக முதல் முறையாக இந்திய நாளிதழ்களின் முதல் பக்கத்தில் இடம்பிடித்தது.
தத்தளிக்கும் உலகம்
அதிவேக வளர்ச்சி ஒன்றையே இலக்காகக் கொண்டு ராக்கெட் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த உலக நாடுகள், கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய பிறகுதான், தாங்கள் வாழ்ந்துவரும் புவியையும் இயற்கையையும் சற்றே அச்சத்துடன் பார்க்கத் தொடங்கின. 2020-ல் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்குவதற்கு முன், ஆஸ்திரேலியக் காடுகள் ஒருசில மாதங்களுக்கு அணைக்க முடியாத அளவுக்குப் பற்றி எரிந்துகொண்டிருந்தன. 2021 ஜூலையில் மட்டும் மஹாராஷ்டிர மாநிலம், சீனா, ஆப்பிரிக்கக் கண்டத்தில் சூடான், ஐரோப்பாவில் பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் என உலகின் பல பகுதிகள் எதிர்பாராத வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்தன. பாலைவன மாநிலமான ராஜஸ்தானிலும், உத்தர பிரதேசத்திலும் தற்போது வெள்ளம் பாய்ந்துகொண்டிருக்கிறது.
எந்த இயற்கைப் பேரழிவால் இந்தியாவில் அதிகமானோர் இறக்கிறார்கள் தெரியுமா? மின்னல் தாக்கி. ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஜூலை 11-ல் மட்டும் மின்னல் தாக்கி 74 பேர் பலியானார்கள். 2004 முதல் ஆண்டுக்குச் சராசரியாக 2,000 பேர் மின்னல் தாக்கிப் பலியாகிவருகிறார்கள். இந்த இறப்பு எண்ணிக்கை முந்தைய 35 ஆண்டுகளைவிட இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதற்கு இணையாக வெப்ப அலையால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. புயல், வெள்ளம் போன்றவற்றின் வீரியத்தை வானிலை கணிப்பு மூலம் ஓரளவுக்காவது முன்கூட்டியே தீர்மானிக்க முடியும். அதே நேரம் வெப்ப அலை, மின்னல் தாக்கி இறப்பது போன்றவை ஏற்படுத்தும் பாதிப்பு பற்றி முன்கூட்டியே முழுமையாக அறிய முடிவதில்லை.
மேலே கூறப்பட்ட இயற்கைப் பேரழிவுகள் எல்லாமே பருவநிலை மாற்றத்தால் உந்தப்பட்டவை; திடீரென நிகழ்பவை அல்ல என்பதையே தற்போதைய ஐ.பி.சி.சி. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெருமழை, வறட்சி, வெப்பமண்டலப் புயல்களின் தீவிரம் அதிகரித்தல், வெப்ப அலைகள், துருவப் பனி உருகுதல் போன்ற அனைத்தும் தீவிரமடையும் என்று எச்சரிக்கும் 3,500 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையை 234 ஆராய்ச்சியாளர்கள், 195 நாடுகளின் பிரதிநிதிகள் இறுதிப்படுத்தி அங்கீகரித்துள்ளனர். அறிவியல் விடுத்துள்ள இந்த எச்சரிக்கைகளை இனிமேலும் புறந்தள்ளுவது பேராபத்து.
கரியமில வாயு (CO2)எனும் எமன்
ஒன்றரை ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகு கொரோனா வைரஸை உலக நாடுகள் தடுப்பூசி மூலமாக ஓரளவு கட்டுப்படுத்திவருகின்றன. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பது என்பது ஓர் இடையறாத போராட்டம். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான தடுப்பூசி புதைபடிவ எரிபொருட்களை உலக நாடுகள் கைவிடுவதுதான். புதைபடிவ எரிபொருட்களை அடிப்படையாகக் கொண்டே உலகில் பெருமளவு மின்சார உற்பத்தியும், வாகனப் பயன்பாடும் உள்ளன. இந்தப் புதைபடிவ எரிபொருள்கள் பெருமளவு கரியமில வாயுவை வெளியிடுகின்றன. உலகம் இயல்பைவிடக் கூடுதலாக வெப்பமடையவும், தொடர்ச்சியாகப் பருவநிலைப் பேரழிவை ஏற்படுத்தவும் இது காரணமாக இருக்கிறது. கடந்த 20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் புவியில் கரியமில வாயு அதிகரித்திருக்கிறது.
“நிலக்கரி, புதைபடிவ எரிபொருட்கள் புவியின் இருப்புக்கே சாவுமணி அடிப்பதற்கு முன், இந்த எரிபொருட்களுக்கு ஏன் நாம் சாவுமணி அடிக்க வேண்டும் என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது” என்கிறார் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ். உலகப் பசுங்குடில் வாயு வெளியீட்டில் பாதிக்கு மேற்பட்ட அளவை அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே வெளியிடுகின்றன. அடுத்ததாக இந்தியா, 27 ஐரோப்பிய நாடுகள் ஆகியவை வருகின்றன.
இவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய தொழில்நுட்பங்கள் தேவை. கொரோனா வைரஸ் தடுப்பூசித் தயாரிப்பில் காட்டப்பட்ட இணக்கத்துடனும் வேகத்துடனும் மாற்று ஆற்றல், எரிபொருள் சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் வழங்க வேண்டும். அத்துடன் தங்கள் நாடுகளின் கரியமிலவாயு வெளியீட்டைக் குறைப்பதற்கான இலக்குகளை வளரும் நாடுகள் புயல் வேகத்தில் விரைவுபடுத்த வேண்டும். மாற்றுத் தொழில்நுட்பங்களைப் பெற்ற பிறகு வளரும் நாடுகளும் கரியமில வாயு வெளியீட்டைக் குறைப்பதில் பங்கேற்க வேண்டும்.
என்ன செய்ய இருக்கிறோம்?
தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட, தற்போதைய உலக சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் ஏற்கெனவே அதிகரித்துவிட்டது. இதை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவதே 2016-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘பாரிஸ் ஒப்பந்த’த்தின் அடிப்படையாக இருந்தது. அந்த வெப்பநிலையைக் கடந்துவிட்டால், பருவநிலைப் பேரழிவு எந்த வகையிலும் கட்டுப்படுத்த இயலாததாக ஆகிவிடும் என்பதே அறிவியலாளர்களின் வலியுறுத்தல். ஆனால், இன்னும் இருபதே ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸைக் கடந்துவிடுவோம். 2050-க்குள் அனைத்துப் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தையும் பூஜ்ய அளவுக்குள் கொண்டுவராவிட்டால், நிலைமை கைமீறிச் சென்றுவிடும் என்று வயிற்றில் புளியைக் கரைக்கிறது தற்போதைய ஐ.பி.சி.சி. அறிக்கை. பாரிஸ் ஒப்பந்தம் நிறைவேறி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைப்பதில் உலக நாடுகள் எந்த அக்கறையும் காட்டவில்லை. 2050-ல் பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைப்போம், 2060-ல் குறைப்போம் என சாக்குப்போக்கு கூறிக்கொண்டும் பொய்யாகவும் உலக நாடுகள் பேசிக்கொண்டிருப்பது நாம் எதிர்கொள்ள இருக்கும் ஆபத்துகளை எந்த வகையிலும் தள்ளிப்போடப் போவதில்லை. மாறாக, விரைவுபடுத்தவே போகின்றன.
முதலில் பருவநிலை மாற்றம் என்று சொல்வதே தவறு, பருவநிலைப் பேரழிவு காலத்தில் நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அது என்றைக்கோ வரப்போகும் ஆபத்து அல்ல… தற்போது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் மிகப் பெரிய பேரழிவு.
உலக நாடுகளின் அரசுகளும் மக்களும் இனிமேலும் இந்த எச்சரிக்கைகளுக்குக் காதுகொடுக்காமல் இருப்பது எதிர்காலத் தலைமுறைகளை அல்ல, இந்தத் தலைமுறையிலேயே பெரும் உயிரிழப்பையும் பொருள் இழப்பையும் ஏற்படுத்தும் என்பதில் கேள்விக்கு இடமில்லை. “ஒரு நெருக்கடியை நெருக்கடியாக எதிர்கொண்டு செயலாற்றினால், மோசமான எதிர்விளைவுகளைத் தடுக்கலாம்” என்று ஐ.பி.சி.சி.யின் அறிக்கை குறித்துக் கூறுகிறார் 18 வயது கிரெட்டா. வளர்ந்தவர்களும் அரசுகளும் அவருடைய தலைமுறையின் குரலுக்குக் காதுகொடுப்பார்களா என்பதில்தான் இந்தப் புவியின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
இந்தியாவுக்கு ஆபத்து!
ஐ.பி.சி.சி. அறிக்கை இந்தியாவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கைகள்:
உலகின் மற்ற பெருங்கடல்களைவிட இந்தியப் பெருங்கடல் பெருமளவு வெப்பமடையும். இதன் காரணமாகவும் ஏற்கெனவே துருவப் பகுதிப் பனிப்பாறைகள் உருகுவதாலும் கடல்மட்டம் ஒன்றரை அடியிலிருந்து 3 அடி வரை அதிகரித்து சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட கடற்கரை நகரங்களின் பகுதிகள் எதிர்காலத்தில் கடலில் மூழ்கும். 3 கோடிப் பேர் பாதிக்கப்படுவார்கள்.
அடுத்து வரும் ஆண்டுகளில் தென்னிந்தியாவில் கனமழைப் பொழிவு அதிகரிக்கும்.
இந்தியாவில் வெப்ப அலைகள், வெள்ள நிகழ்வுகள் அதிகரிக்கும்.
இமய மலைத்தொடரின் பனிச்சிகரங்கள் உருகி, அவற்றின் பனிப்பரப்பு குறையும். தொடர்ச்சியாகப் பெருமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவை இமய மலைத்தொடர் அடிவார மாநிலங்கள், ஆற்றுச் சமவெளிப் பகுதிகளில் நிகழும்.
இணைந்திருங்கள்