கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானத்தில் ஒரு விடயம் உண்டு. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளைத் திரட்டும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படும் என்பதே அது. அவ்வாறு ஜெனிவா தீர்மானத்தில் அப்பொறிமுறையை இணைப்பதற்காக தொடக்கத்திலிருந்தே உழைத்தது பி.ரி.எஃப் எனப்படும் பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பு ஆகும். மியான்மர் மற்றும் சிரியாவில் உருவாக்கப்பட்ட பொறிமுறைகள மனதில் வைத்து பிரிஎப் உழைத்திருந்தாலும் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது அப்படிப்பட்ட ஒரு பொறிமுறை அல்ல என்ற ஒரு விமர்சனம் உண்டு.
மேலும் அது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு வரைந்த ஒரு கடிதத்தில் கேட்டிருந்தது போன்ற ஒரு பொறிமுறையும் அல்ல.
எனினும் அப்பொறிமுறையானது சான்றுகளை திரட்டுவதற்கான ஒரு கட்டமைப்பாக இயங்கும் என்று கூறப்பட்டது. கூட்டமைப்பு அதை ஒரு முக்கிய அடைவாகக் காட்டியது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த ஐநா கூட்டத் தொடரில் தனது வாய்மூல அறிக்கையில் மனித உரிமைகள் ஆணையாளர் மேற்படி பொறிமுறையானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து செயற்படத் தொடங்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அது ஒரு பொறிமுறை என்று அழைக்கப்பட மாட்டாது என்றும் சான்றுகளை திரட்டுவதற்கான செயலகம் என்றே அழைக்கப்படும் என்றும் ஒரு தகவல் வந்தது. அப்பொறிமுறைக்குள் மொத்தம் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும், கடந்த ஆண்டு கடைசி மூன்று மாதங்களும் இந்த ஆண்டில் முதல் ஒன்பது மாதங்களுமாகச் சேர்த்து மொத்தம் ஒரு ஆண்டு காலகட்டத்திற்குரிய நிதி அதற்கு ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதற்கு வேண்டிய நிதியை ஒதுக்குவதற்கு சில நாடுகள் முன் வந்ததாகவும் தெரியவருகிறது.எனினும் சீனா பாகிஸ்தான் போன்ற இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அப்பொறிமுறைக்குரிய நிதியை குறிப்பிட்ட சில நாடுகளிடமிருந்து விசேஷ நிதியாக சேகரிப்பதை எதிர்த்ததாகத் தெரிகிறது. பதிலாக ஐநாவின் பொது நிதி ஒதுக்கீட்டிற்கூடாக அந்த நிதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரியவருகிறது.
ஐநா மன்றம் வளம் பொருந்திய நாடுகளின் நிதியில் தங்கியிருக்கிறது. போதிய நிதி ஐநாவுக்கு கிடைப்பதில்லை. அதிலும் குறிப்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்துக்கு நிதிப்பற்றாக்குறை உண்டு. இலங்கைத் தீவின் வட பகுதியில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் இயங்கும் இரண்டு யுனிசெப் காரியாலயங்கள் அவற்றின் நடவடிக்கைகளை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தோடு குறைந்தளவு அலுவலர்களோடு மட்டுப்படுத்துகின்றன என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இது ஐநாவுக்குள்ள நிதி நெருக்கடி காரணமாக என்ற ஒரு வாதம் உண்டு. அதேசமயம் இலங்கைத் தீவு நடுத்தர வருமானத்துக்குரிய ஒரு நாடாக வளர்ச்சியடைந்து விட்டதால் மேற்படி அலுவலகங்கள் அவற்றின் செயற்பாடுகளை குறைத்து கொள்கின்றன என்று ஒரு விளக்கமும் உண்டு.
இலங்கைத் தீவு தொடர்பான ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் இந்த ஆண்டுக்குரிய அறிக்கையில் நிதி நெருக்கடி பற்றிச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. சான்றுகளைத் திரட்டும் பொறிமுறையின் செயற்பாடுகள் நிதி போதாமையால் கட்டுப்படுத்தப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், மேற்படி சான்றுகளைத் திரட்டும் பொறிமுறையை ஐநாவின் பொதுவான நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் பொறிமுறைக்கு வழங்கப்படும் நிதியை திட்டமிட்டுக் குறைத்து விட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தொடக்கத்தில் 12 உறுப்பினர்களைக் கொண்ட பொறிமுறைக்கு 2.8 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இப்போது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டொலர்தான் ஒதுக்கப்படும் என்று தெரியவருகிறது.இதனால் அப்பொறிமுறையின் பருமனும் கனதியும் குறைக்கப்பட்டு விட்டன. இப்போது வழங்கப்படும் நிதியின்படி மொத்தம் 8 உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்டமைப்பாக அது இயங்கும்.அதில் இதுவரை ஐந்து நிபுணர்கள் நியமிக்கப்பட்டு விடடார்கள். மேலும், இப்பொறிமுறையானது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து வரும் செப்டம்பர் மாதம் வரையிலும் இயங்கும். அதாவது அதன் செயற்பாட்டுக் காலம் ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. இது தொடர்பில் ஐநா வட்டாரங்களை மேற்கோள் காட்ட முடியவில்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாத கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகளை ஒருங்கிணைத்த பொழுது மேற்படி சான்றுகளை திரட்டும் பொறிமுறையை அதிகம் வலியுறுத்தி கூறியது விக்னேஸ்வரனின் கூட்டணியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம்தான். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த கோரிக்கையின்பால் அதிகம் அக்கறை காட்டவில்லை. கிளிநொச்சியில் நடந்த மூன்றாவது சந்திப்பின்போது அக்கோரிக்கையை கஜேந்திரகுமார் நிபந்தனையோடு ஏற்றுக் கொண்டார்.குறிப்பிட்ட பொறிமுறைக்குரிய காலகட்டம் ஆறு மாதங்களாக குறைக்கப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும்
இப்பொழுது அப்பொறிமுறைக்குரிய காலகட்டம் ஆறு மாதங்களாக குறுகப்பட்டிருக்கிறது. ஆனால் இது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்ட ஆறு மாதங்கள் அல்ல.மாறாக,அப்பொறிமுறையின் வீரியம் குறைக்கப்பட்டதால் குறுக்கப்பட்ட அதன் ஆயுட்காலம்தான் அது.
அதாவது அக்கூட்டுக் கடிதத்தில் கேட்கப்பட்டது போன்ற ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வில்லை.இது முதலாவது.இரண்டாவதாக, ஐநா மனித உரிமைகள் ஆணையர் கூறியதுபோல கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து அது இயங்கத் தொடங்கவில்லை. அது வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்துதான் இயங்க போகிறது.மூன்றாவதாக அப்பொறிமுறையானது முன்பு கூறப்பட்டது போல 12 உறுப்பினர்களைக் கொண்டதாக அமையவில்லை.இப்பொழுது அதில் மொத்தம் எட்டு உறுப்பினர்கள் இருப்பார்கள்.
தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் ஊடகங்கள் மத்தியிலும் அப்பொறிமுறை குறித்து போதிய விளக்கங்களும் இல்லை. ஆர்வமும் இல்லை.அது தொடர்பாக தெளிவற்ற தகவல்களே கடந்த ஓராண்டு முழுவதும் உலவி வருகின்றன.கடந்த ஐநா தீர்மானத்தில் அப்பொறிமுறை அறிவிக்கப்பட்டதிலிருந்தே அது தொடர்பில் குழப்பமான ஊர்ஜிதமற்ற தகவல்கள்தான் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
தமிழ்த் தரப்பு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஐநாவை ஓரணியாக அணுகவில்லை.ஒரே கட்டமைப்பின் ஊடாக அணுகவில்லை.ஒரு பொதுக்கட்டமைப்போ பொதுப் பொறிமுறையோ இல்லை
பிரித்தானியாவில் உள்ள பி. ரி.எஃப் போன்ற சில அமைப்புகள் ஐநாவுடன் நெருக்கமாக செயல்படுவதாகத் தெரிகிறது.அதேசமயம் ஜெனீவாவை மையமாகக்கொண்டு ஒரு தமிழ் அமைப்பும் செயற்படுகின்றது. இவைதவிர தாயகத்திலுள்ள கட்சிகளும் ஐநாவுடன் தொடர்பில் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட தாயகம் மற்றும் புலம் பெயர்ந்த தரப்பில் உள்ள அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு கிடையாது.ஒருவர் மற்றவரை அங்கீகரிக்கும் நிலைமையும் இல்லை. ஒருவர் மற்றவரை அனுசரித்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து செயற்படும் நிலைமையும் இல்லை. அவ்வாறு இம்மூன்று தரப்புகளையும் இணைத்து இயக்குவதற்கு பொருத்தமான தலைமைகளும் இல்லை.
ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவர்கள் ஒரே குரலில் ஒரே கட்டமைப்பாக இயங்குகிறார்கள்.அவர்களிடம் ஒரு பொதுவான வேலைத்திட்டம் உண்டு.ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரல் உண்டு.முழு வளத்தையும் ஒரு மையத்தை நோக்கி அவர்கள் குவிக்கிறார்கள்.
இம்முறை ஜெனிவா கூட்டத் தொடருக்கு தமிழ் மக்கள் பக்கமிருந்து யாரும் போகவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்துக்கும் ஐநாவுக்கும் இடையே உரையாடல்கள் உண்டு. அது தவிர ஐநாவுக்கு கூட்டாக கடிதம் எழுதிய ஐந்து கட்சிகளின் கூட்டுக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் சேர்ந்த சில அதிகாரிகளுக்கும் இடையே கடந்த வாரம் ஒரு சூம் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இவை தவிர தமிழ்த் தரப்பில் இருந்து யாரும் இம்முறை ஐநாவுக்கு போகவில்லை.
மேலும் ஜெனிவாவில் வழமையாக நடப்பதைப் போல பக்க நிகழ்வுகளும் இம்முறை அதிக தொகையில் இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்த ஆண்டு 17 பக்க நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும் இந்த ஆண்டு அதைவிடக் குறைவாகவே இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. நிதி உதவி வழங்குனர்களின் தொகை குறைந்தமை ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை ஒருவித சோர்வான சூழ்நிலை காணப்படுவதாக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால் அரசுத் தரப்பிலிருந்து ஒரு பலமான தூதுக்குழு சென்றிருக்கிறது. அங்கே அவர்கள் மேற்சொன்ன பொறிமுறையை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார்கள்.அப்பொறி முறை எப்படிப்பட்டது ?அதன் உள்ளடக்கம் எப்படிப்பட்டது? அது எவ்வளவு காலத்துக்கு இயங்கும்? இப்பொழுது பொறிமுறையின் நிலை என்ன? போன்ற கேள்விகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் விளக்கங்கள் இல்லை. ஆனால் அப்பொறி முறையை இல்லாமல் செய்யும் முனைப்போடு அரசாங்கம் திட்டமிட்டு தனது வளங்கள் அனைத்தையும் திரட்டிச் செயல்படுகிறது.மேலும்,ஜெனிவா கூட்டத் தொடருக்கு சென்ற அரசு தூதுக்குழு நாடு திரும்பிய கையோடு ஒரு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன்படி நிலைமாறுகால நீதிக்குரிய அலுவலகங்களான காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் இழப்பீடு நீதிக்கான அலுவலகம் ஆகிய இரண்டுக்கும் 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
அதாவது அரசாங்கம் ஜெனிவாவைக் கையாள முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்கிறது என்று பொருள். சான்றுகளைத் திரட்டுவதற்கான பொறிமுறையின் வீரியம் குறைக்கப்பட்டமையானது அந்த நம்பிக்கையைப் பலப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாமா?
இணைந்திருங்கள்