நாராயணி சுப்ரமணியன்

“இது இப்படியே தொடர்ந்தால், எதிர்கால பூமி நரகமாக இருக்கும்” என்று எச்சரிக்கிறார் அறிவியலாளர் டிம் பாமர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பேசும்போது, “இது மனித இனத்துக்கான ரெட் அலர்ட்” என்று தெரிவித்திருக்கிறார்.

சைபீரியா போன்ற ஒரு பனிசூழ்ந்த பகுதியிலும் வெப்பம் சுட்டெரித்தது. சீனாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். ஜெர்மனியிலும் பெல்ஜியத்திலும் ஏற்பட்ட வெள்ளத்தில் பெருமளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கின்றன. வடமேற்கு அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பச்சூழல் ஏற்பட்டது. இதோ இந்தக் கட்டுரையை எழுதும் இந்த நொடி வரை துருக்கியில் காட்டுத்தீ ஆங்காங்கே எரிந்துகொண்டுதான் இருக்கிறது.

கடந்த சில வாரங்களில் மட்டும் செய்திகளில் தட்டுப்பட்ட காலநிலைப் பேரிடர்கள் இவை. இதுபோன்ற தொடர் பேரிடர்களே எதிர்காலத்தின் நிதர்சனமாக இருக்கப்போகின்றன என்று எச்சரித்திருக்கின்றனர் அறிவியலாளர்கள்.

காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (Intergovernmental Panel for climate change) என்று அழைக்கப்படும் சர்வதேச விஞ்ஞானிகள் குழு, தங்களது ஆறாவது காலநிலை அறிக்கையை இப்போது வெளியிட்டிருக்கிறது. 66 நாடுகளைச் சேர்ந்த 234 அறிவியலாளர்கள் சேர்ந்து தயாரித்திருக்கும் இந்த அறிக்கை, ஓர் இறுதி எச்சரிக்கையாகவே தெரிகிறது.

பசுமைக்குடில் வாயுக்கள் மற்றும் கரிம உமிழ்வால் புவியின் வெப்பநிலை அதிகரித்து, காலநிலை மாற்றமடைகிறது என்ற அடிப்படை அறிவியல் நாம் அறிந்ததுதான். அதைக் கட்டுக்குள் வைக்கவேண்டுமானால், பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்றும், அதிகபட்சம் 2 டிகிரி அதிகரிப்புக்குள் இது கட்டுக்குள் வைக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பூமியில் நடந்துகொண்டிருக்கும் மாற்றங்களை ஆராய்ந்த வல்லுநர்கள் ஒருமித்த ஒரு முடிவை எட்டியிருக்கிறார்கள்.

வெறும் கண்துடைப்பு!

“காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி அரசுகள் செய்திருப்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு. என்ன செய்தாலும் அடுத்த இரு தசாப்தங்களுக்குள் 1.5 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை அதிகரிப்பதைத் தடுக்க முடியாது”.

2040க்குள் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துவிடும் என்றும், உமிழ்வுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் இது 2037க்குள்ளேயே நடந்துவிடலாம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக நாம் இதுவரை காலநிலை மாற்றத்துக்கு எதிராக செய்த முயற்சிகளுக்கு ஒரு ப்ராக்ரஸ் ரிப்போர்ட் எடுத்துப் பார்த்ததில், மனித இனம் மோசமாக ஃபெயிலாகியிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஃபெயிலானதற்கு என்ன தண்டனை?

அதை ஏற்கெனவே நாம் அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அதீத காலநிலை நிகழ்வுகள், வெள்ளப்பெருக்கு, கடல்மட்டம் உயர்தல், தாறுமாறான பருவமழை, அதனால் சிக்கலுக்குள்ளாகும் விவசாயம் என்று காலநிலை மாற்றம் எல்லா தளங்களிலும் தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டத் தொடங்கிவிட்டது. முந்தைய அறிக்கைகளோடு ஒப்பிடும்போது இந்த அறிக்கையில் ஒரு கூடுதல் தரவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. வளர்ந்த செல்வச்செழிப்பான நாடுகள் ஓரளவு தப்பித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது வெளிவந்திருக்கும் அறிக்கை, “காலநிலை பாதிப்புகளிலிருந்து யாரும் தப்ப முடியாது” என்று திட்டவட்டமாக அறிவிக்கிறது. பூமியில் எந்த இடமும் ஆபத்துக்குள்ளாகலாம் எனும்போது நாம் எங்கே செல்வது?!

காலநிலை மாற்றம் மனித செயல்பாடுகளால்தான் ஏற்பட்டது என்பதும் சந்தேகத்துக்கிடமின்றி இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, “இது இயற்கை சுழற்சியின் அங்கமாக இருக்கலாம் இல்லையா?” என்பதுபோன்ற சமாளிப்புகள் இனி செல்லுபடியாகாது.

இந்த அறிக்கை தெரிவிக்கும் மற்றொரு விஷயமும் கவலையளிப்பதாக இருக்கிறது. பசுமைக்குடில் வாயுக்களால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை நாம் சரிகட்ட முடியாது. அதன் தாக்கம் நூறு ஆண்டுகள்வரை நீடிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். உமிழ்வுகளைக் குறைத்தால் எல்லாம் மீண்டும் சமநிலைக்கு வந்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை இப்போது உடையத் தொடங்கியிருக்கிறது. இனிமேல் கூடுதல் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு மட்டுமே நம்மால் முயற்சிகள் எடுக்க முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்துகுஷ் இமாலயப் பகுதிகளில் பனி உருகுவது, புயல்களாலும் கடல்மட்டம் உயர்வதாலும் ஏற்படும் வெள்ள பாதிப்பு, தாறுமாறான பருவமழையால் விவசாயம் பாதிக்கப்படுவது, அதீத வெப்பம் போன்றவை ஏற்படலாம். ரிஷிகங்கா பகுதியில் பிப்ரவரி மாதம் நடந்த பேரிடர் நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம். எளிதில் கணிக்கமுடியாத இதுபோன்ற பேரிடர்கள் வருங்காலத்தில் அதிகரிக்கும். ஏற்கெனவே இந்தியாவின் முக்கிய நகரங்கள் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக கடந்த சில அறிக்கைகள் எச்சரித்திருந்தன.

“இது இப்படியே தொடர்ந்தால், எதிர்கால பூமி நரகமாக இருக்கும்” என்று எச்சரிக்கிறார் அறிவியலாளர் டிம் பாமர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பேசும்போது, “இது மனித இனத்துக்கான ரெட் அலர்ட்” என்று தெரிவித்திருக்கிறார். சும்மா அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திட்டங்கள் வகுக்காமல், எரிபொருள் பயன்பாட்டில் பெரிய அளவிலான ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்காமல் நம்மால் தடுக்க முடியும். நாம் ஒழுங்காக செயல்படாமல் அதையும் எட்டிவிட்டால் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.

இனி எடுக்கப்படும் ஒவ்வொரு அரசு முடிவும் காலநிலையையும் கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட வேண்டும். தீர்வுகளை நோக்கி நகராமல் அடுத்த அறிக்கையிலும் நாம் ஃபெயில் மார்க் வாங்கிவிட்டால் மனித இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

‘காலநிலை மாற்றம்’ என்பதிலிருந்து ‘காலநிலை ஆபத்து’ என்ற கட்டத்தை அடைந்துவிட்டோம். தீர்வுகளை விவாதித்து உடனடியாக செயல்படுத்தவேண்டிய நேரம் இது.