தலிபான் பயங்கரவாதிகளின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுடன் எல்லையை கொண்டுள்ள நாடுகள், மனிதாபிமானமான முறையில் அகதிகளுக்கு தத்தமது எல்லைகளை திறந்து விடுமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.

இடம்பெயர்பவர்களில் 72000 சிறார்களும் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறார் பாதுகாப்பு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இடம்பெயர்ந்து செல்லும் பலர் தலைநகர் காபூலை நோக்கி செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகரம் தாலிபான்களின் பாரிய தாக்குதலுக்கு உள்ளாகாது என இடம்பெயர்ந்து செல்பவர்கள் கருதுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் பாரிய உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான கந்தகார், இன்று தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தலிபான்களுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கந்தகார் விளங்குகின்றது. அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பதற்கு முன்னர் கந்தகார் தலிபான்களின் கோட்டையாக கருதப்பட்டது.

இந்த நிலையில், கடந்த மாதத்தில் மாத்திரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் உள்ள சகல அமெரிக்கர்களையும் பாதுகாப்பாக தாயகத்திற்கு அழைத்து செல்வதற்காக மூவாயிரம் அமெரிக்க துருப்பினர் காபூல் வானூர்தி நிலையத்தில் நிலைகொண்டுள்ளனர்.

அதேபோல, பிரித்தானிய பிரஜைகளை பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக சுமார் 600 பிரித்தானிய பாதுகாப்பு படைத்தரப்பினர், பிரித்தானிய தூதுவராலயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.