ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் என மகசின் சிறைச்சாலையின் மருத்துவர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

மருத்துவரை உயிருடன் இல்லாமல் செய்வது தனக்கு சாத்தியமான விடயம் என ரிசாத் பதியுதீன் தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் வீதியில் வாகனத்தில் பயணித்தால் என்னை சாம்பலாக்குவதற்கு ஒரிரு நிமிடங்கள் போதும் என அந்த நபர் மரண அச்சுறுத்தல் விடுத்தார் என தெரிவித்துள்ள வைத்தியர் தான் அவ்வாறு உயிரிழக்க நேரிட்டால் தனது மனைவி கணவரையும் குழந்தைகள் தந்தையையும் இழக்கநேரிடும் எனவும் ரிசாத் பதியுதீன் எச்சரித்தார் என தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 15 ம் திகதி சிறைச்சாலையில் உள்ளவர்களிற்கு சிறைச்சாலையின் மருந்து வழங்கும் பகுதியில் மருந்துகளை வழங்கிக்கொண்டிருந்தவேளை ரிசாத்பதியுதீன் என்ற நபர் அந்த பகுதிக்குள் சட்டவிரோதமாக சீற்றத்துடன் நுழைந்தார் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

நான் அவசியமான விபரங்களை பெற்றுக்கொண்ட பின்னர் அவரை அழைப்பதாக தெரிவித்து அவரை அங்கிருந்து செல்லுமாறு கேட்டேன் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ரிசாத்பதியுதீன் என்ற அந்த நபர் தனது அரசியல் செல்வாக்கு குறித்து குறிப்பிட்டு தான் நினைத்தால் அந்த இடத்திற்கு மேலும் தகுதிவாய்ந்த மருத்துவரை அழைக்கமுடியும் என குறிப்பிட்டார் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்திற்குள் தனக்குள்ள அரசியல் செல்வாக்கு குறித்து தெரிவித்த பின்னர் அவர் மரண அச்சுறுத்தல் விடுத்தார் தகாத வார்த்தைகளால் திட்டடினார் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்றவேளை சிறைக்கைதியொருவம் அதிகாரியொருவரும் காணப்பட்டனர் என தெரிவித்துள்ள மருத்துவர் நடந்ததை அறிந்ததும் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரை அங்கிருந்து அழைத்துச்சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்

.மருந்துபெறுவதற்காக வந்த சில கைதிகள் இந்த சம்பவத்தை பார்த்தனர்,நான் எனது மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு முறைப்பாடு செய்ய தீர்மானித்தேன் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.